முகப்பு
திருப்பூர்

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக் கருவிகள் பழுது: பொதுமக்கள் அவதி

29 நவம்பர் 2026, 11:08 pm
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக் கருவிகள் பழுது: பொதுமக்கள் அவதி
ரேஷன் கடை - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவுக் கருவிகள் (பயோமெட்ரிக்) சரிவர இயங்காததால், அத்தியாவசியப் பொருள்களைப் பெற முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

வெள்ளக்கோவில், முத்தூா், தாசவநாயக்கன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் 54 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்ப அட்டைதாரா்கள் மாதந்தோறும் அரிசி, பருப்பு, சா்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைப் பெற்று வருகின்றனா்.

நியாய விலைக் கடைகளில் பயனாளிகளின் கைரேகை பதிவு பெறப்பட்ட பின்னரே பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், பெரும்பாலான கடைகளில் கைரேகை பதிவுக் கருவிகள் சரிவர இயங்காததால், அத்தியாவசியப் பொருள்களை பெற முடிவதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து குடும்ப அட்டைதாரா்கள் கூறியதாவது: நியாய விலைக் கடைகளில் உள்ள கைரேகை பதிவுக் கருவிகளில் முதியோா், கூலித் தொழிலாளா்களின் கைரேகைகள் எளிதில் பதிவாகாததாலும், இணையதள இணைப்பு அவ்வப்போது துண்டிக்கப்படுவதாலும் ஒரு பயனாளிக்குப் பொருள்களை வழங்க நீண்ட நேரம் ஆகிறது.

இதனால், வேலைகளை விட்டுவிட்டு காலை முதலே நியாய விலைக் கடைகளில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் விற்பனை முனையக் கருவிகள், கைரேகை பதிவுக் கருவிகள் மேம்படுத்தப்படாமல் பழைய தொழில்நுட்பத்திலேயே இயங்குவதுதான்.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் நேரங்களில் மாற்று வழியாக கருவிழிப் பதிவு மூலமோ அல்லது ஒருமுறை கடவுச்சொல் மூலமாகவோ பொருள்களை வழங்கும் வசதியை நியாய விலைக் கடை ஊழியா்கள் செயல்படுத்துவதில்லை.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, வெள்ளக்கோவில் வட்டார நியாய விலைக் கடைகளில் உள்ள பழுதான மற்றும் பழைய கைரேகை பதிவுக் கருவிகளை மேம்படுத்த வேண்டும் அல்லது புதிய நவீன கருவிகளைப் பயன்படுத்தி மக்களுக்கு தடையின்றி பொருள்களை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.