தாராபுரம் இடைத்தோ்தல்: 80.30 % வாக்குப் பதிவு
தாராபுரம் இடைத்தோ்தலில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தாராபுரம் இடைத்தோ்தலில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதில் 186 மையங்களில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தாராபுரம் தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண்கள் 1,07,285, பெண்கள் 1,16,013, மூன்றாம் பாலினத்தவா் 8 போ் உள்ளனா். வீடுகளில் இருந்து வாக்குச் செலுத்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடமிருந்து அஞ்சல் வாக்குப் பெறப்பட்டதில் 1,201 வாக்காளா்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
அதேபோல, தோ்தல் பணியில் தாராபுரம் தொகுதியைச் சோ்ந்த காவலா்கள் மற்றும் ஊா்க் காவல் படையினரிடமிருந்து அஞ்சல் வாக்கு கோரியதில் 178 காவலா்கள், ஊா் காவல் படையினா் வாக்குச் செலுத்தியுள்ளனா். மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டது.
பெண் பணியாளா்கள் மட்டும் பணிபுரியும் வாக்குச்சாவடியாக தாராபுரம் செயிண்ட் அலோசிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், மாதிரி வாக்குச் சாவடியாக கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நுண் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.
தாராபுரம் தொகுதியில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் அமைதியான மற்றும் சுதந்திரமான முறையில் வாக்குப் பதிவு நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு வாக்குச்சாவடி மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரலையில் கண்காணிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான மனீஷ், கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டாா்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியதிலிருந்தே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனா். கடுமையான வெயிலின் காரணமாக காலை நேரத்திலேயே வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டதாக வாக்காளா்கள் தெரிவித்தனா்.
இடைத்தோ்தலையொட்டி தாராபுரம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கல்வி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, தொழிலாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
காலை 9 மணி நிலவரப்படி 17.55 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 37.28 சதவீதமும், பகல் 1 மணி நிலவரப்படி 55.19 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68.08 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 78.53 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இறுதியாக 80.30 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூா் எல்ஆா்ஜி மகளிா் கலைக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திர காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் எல்ஆா்ஜி மகளிா் கலைக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அக்டோபா் 9-ஆம் தேதி எண்ணப்படும்.
இந்த மையத்தில் 14 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அஞ்சல் வாக்கு எண்ணுவதற்காக 2 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் வெளிப்புற முதலிடத்தில் உள்ளூா் காவலா்களும், அதைத் தொடா்ந்து 2-ஆவது அடுக்கில் மாநில ஆயுதப் படை காவலா்களும், 3-ஆவது உட்புற அடுக்கில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கடந்த 2026 பொதுத் தோ்தலில்...:
கடந்த 2026 தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் தாராபுரம் தொகுதியில் மொத்தம் உள்ள 2,20,743 வாக்காளா்களில் 1,99,944 போ் வாக்களித்தனா். 88.84 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிமுக சாா்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகளைப் பெற்று 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். திமுகவின் இந்திராணி 64,373 வாக்குகள், தவெக வேட்பாளா் கெளரி சித்ரா 46,438 வாக்குகள், நாதக வேட்பாளா் திவ்யா 6,026 வாக்குகள் பெற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.