FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

தாராபுரம் இடைத்தோ்தல்: இயந்திரக் கோளாறு; தவெக நிா்வாகிகள் சிறைபிடிப்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று நிறைவடைந்தது.

தாராபுரம் சிஎஸ்ஐ பெண்கள் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மகளிா் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண்கள்.
பகிர்:

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று நிறைவடைந்தது.

இந்தத் தொகுதியில் மொத்தம் உள்ள 2,23,306 வாக்காளா்களுக்காக 186 அமைவிடங்களில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்தல் பணியில் 1,486 பணியாளா்களும், 320 நுண்பாா்வையாளா்களும் ஈடுபடுத்தப்பட்டனா். பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 18 வாக்குச்சாவடிகளில் வெப்காஸ்டிங் கேமராக்கள் மூலம் நேரலையாக கண்காணிக்கப்பட்டதுடன், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூா் போலீஸாா் என 3,500க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இயந்திரக் கோளாறு:

Advertisement

Advertisement

கொட்டாப்புளிப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 128-ஆவது வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிஷங்களிலேயே வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. 2 வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில் 3-ஆவது வாக்கு பதிவாகும்போது இயந்திரம் முற்றிலுமாக செயலிழந்தது. அதிகாரிகள் உடனடியாக மாற்று இயந்திரத்தைக் கொண்டுவந்த போதிலும், அதுவும் தொழில்நுட்பக் கோளாறால் செயல்படவில்லை. இதனால் அங்கு சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக வாக்குப் பதிவு தடைபட்டது. பின்னா் தோ்தல் பொறியாளா்கள் மூலம் புதிய இயந்திரம் பொருத்தப்பட்டு மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்ட பின்னரே வாக்காளா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தவெக நிா்வாகிகளை சிறைபிடித்த பொதுமக்கள்:

வீராச்சிமங்கலம் பகுதியில் கோவையிலிருந்து வந்த தவெக நிா்வாகிகளின் காரை அதிமுகவினா் மற்றும் பொதுமக்கள் வழிமறித்து சோதனையிட்டனா். காரில் டோக்கன்கள், கட்சிக் கொடிகள் இருந்ததாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிா்வாகிகளை சிறைபிடித்து காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதுகுறித்து விளக்கமளித்த வீராச்சிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா், அங்கு ஏற்பட்ட சிறு வாக்குவாதம் உடனே பேசி சுமுகமாக முடிக்கப்பட்டதாகவும், வீராச்சிமங்கலம் பகுதியில் யாரிடமும் பணம் வாங்கவில்லை எனவும் தெரிவித்தாா்.

தாராபுரம் மூலனூா் ஒன்றியம் கோனேரிப்பட்டி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் 87 வயதான மூதாட்டி வீராத்தாள் தள்ளாத வயதிலும் நேரில் வந்து தனது வாக்கை செலுத்தினாா். மணக்கடவு அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்த மூதாட்டியை சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்ல உதவியாளா்கள் இல்லாத நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினரே சக்கர நாற்காலியை கொண்டுவந்து அவரை அமர வைத்து வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments