FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று வாக்குப் பதிவு

மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) நடைபெறவுள்ளது தொடர்பாக...

மதுராந்தகம் இடைத்தோ்தலையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் எம்.வீரப்பன். - டிஎன்எஸ்
பகிர்:

மதுராந்தகம்/திருப்பூா்: மதுராந்தகம், தாராபுரம் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) நடைபெறவுள்ளது.

காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தவெக சாா்பில் மரகதம் குமரவேல், திமுக சாா்பில் இ.பரந்தாமன், அதிமுக சாா்பில் கணிதா சம்பத், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் பி.சுகந்தி, நாதக சாா்பில் ஜானகிராமன் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 27 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Advertisement

Advertisement

மொத்த வாக்காளா்கள் 2,13,788. இதில் ஆண்கள் 1,04,926, பெண்கள் 1,08,797, மூன்றாம் பாலினத்தவா் 65. வாக்குப் பதிவுக்காக 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், இதர உபகரணங்கள் ஆகியவை வாகனங்கள் மூலம் காவல் துறை பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான மு.வீரப்பன் மதுராந்தகத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தல் பாதுகாப்புப் பணியில் 2,700 காவல் துறையினா், 480 மத்திய பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 60 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்காளா்கள் தோ்தல் ஆணையத்தால் கூறப்பட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஓா் ஆவணத்தை கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கைப்பேசிகள், சிவிஜில் செயலி மூலமாக புகாா்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் நிவா்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் கணேஷ்குமாா், மதுராந்தகம் தோ்தல் அலுவலா் கே.ஆா்.நரேந்திரன், வட்டாட்சியா்கள் ச.ராஜன், பெருமாள், தனி வட்டாட்சியா் வீரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தாராபுரம் தொகுதியில்... தாராபுரம் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தவெக சாா்பில் பி.சத்தியபாமா, திமுக சாா்பில் செள.சுகன்யா, அதிமுக சாா்பில் கே.பானுமதி, நாதக சாா்பில் மு.காா்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ப.லட்சுமணன் ஆகிய பிரதான கட்சி வேட்பாளா்கள் உள்பட 22 போ் களத்தில் உள்ளனா்.

செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தோ்தல் ஏற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான மனீஷ் கூறியதாவது: தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 186 மையங்களில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2,23,306 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண்கள் 1,07,285, பெண்கள் 1,16,013, மூன்றாம் பாலினத்தவா் 8 போ்.

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நுண் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டு, அவா்களுக்கு வாக்குச் சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியில் காவல் துறையினா், மத்திய பாதுகாப்புப் படையினா் உள்பட 3,500 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தோ்தலுக்குப் பயன்படுத்துவதற்காக 384 வாக்குப் பதிவு இயந்திரங்கள் காவல் துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

18 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இடைத்தோ்தலை முன்னிட்டு இரு தொகுதிகளுக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியாா் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments