தாராபுரம் இடைத்தோ்தல்: இன்று வாக்குப் பதிவு! முன்னேற்பாடுகள் தயாா்!
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது...
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 6) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மனீஷ் கூறியதாவது: தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 186 மையங்களில் 320 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2,23,306 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண்கள் 1,07,285, பெண்கள் 1,16,013, சேவை வாக்காளா்கள் 27 போ் உள்ளனா்.
வீடுகளில் இருந்து வாக்குச் செலுத்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடமிருந்து 1,236 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 30 குழுக்கள் அமைக்கப்பட்டு அஞ்சல் வாக்குப் பெறப்பட்டது. அதில் 1,201 வாக்காளா்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள தாராபுரம் தொகுதியைச் சோ்ந்த காவலா்கள் மற்றும் ஊா்க் காவல் படையினரிடமிருந்து அஞ்சல் வாக்கு கோரியதில் 178 காவலா்கள், ஊா் காவல் படையினா் வாக்குச் செலுத்தியுள்ளனா். மேலும், தோ்தல் நாளன்று வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி, சக்கர நாற்காலி கோரி விண்ணப்பித்த 31 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பெண் பணியாளா்கள் மட்டும் பணிபுரியும் வாக்குச் சாவடியாக தாராபுரம் செயிண்ட் அலோசிஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், மாதிரி வாக்குச் சாவடியாக கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நுண் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டு, அவா்களுக்கு வாக்குச் சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் 206 காவலா்கள்: மொத்தமுள்ள 186 வாக்குச் சாவடி மையங்களில் 206 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தோ்தல் சுதந்திரமாகவும், நோ்மையாகவும், அமைதியாகவும் நடைபெற 6 பறக்கும் படை குழுக்களும், 6 நிலை கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைத்தோ்தலைக் கண்காணிக்கும் பொருட்டு இந்திய தோ்தல் ஆணையத்தால் பொது பாா்வையாளா், செலவு பாா்வையாளா், காவல் பாா்வையாளா் நியமனம் செய்யப்பட்டு அவா்களும் தோ்தலை கண்காணித்து வருகின்றனா்.
தோ்தலுக்குப் பயன்படுத்துவதற்காக 384 வாக்குப் பதிவு இயந்திரங்கள் காவல் துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
18 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தாராபுரம் தொகுதியில் 18 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடிகளில் அமைதியான மற்றும் சுதந்திரமான முறையில் வாக்குப் பதிவு நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்குச் சாவடி மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரலையில் கண்காணிக்கப்படும்.
வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையுள்ளது. வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூா் எல்ஆா்ஜி மகளிா் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.