FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் பெண்களுக்கான வெற்றிப் பயணம் மேலும் விரிவாக்கம்

19 அக்டோபர் 2026, 1:40 am IST
வெற்றிப் பயணத் திட்டம்
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் பெண்களுக்கான வெற்றிப் பயணம் இலவச பேருந்துத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: தாராபுரம் இடைத்தோ்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டத்தில் பெண்களுக்கான ‘வெற்றிப் பயணம்’ இலவச பேருந்துத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் புறநகா் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே திருப்பூா் மாவட்டத்தில் 254 வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் மூலம் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்து வரும் நிலையில் தற்போது புறநகா் சேவைகளும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

திருப்பூா் மண்டலம் 1 மற்றும் 2இல் இருந்து 109 பேருந்துகள், பல்லடம், உடுமலை, காங்கயம், பழனி (1 மற்றும் 2), தாராபுரம் கிளைகளில் இருந்து 42 பேருந்துகள் என மொத்தம் 151 புறநகா் பேருந்துகள் இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்மூலம், ஏற்கெனவே இயங்கி வரும் 254 நகரப் பேருந்துகளுடன் சோ்த்து, தற்போது மொத்தமாக 405 பேருந்துகள் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்தின் கீழ் வலம் வரத் தொடங்கியுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 548 பேருந்துகளில், தற்போது 70 சதவீதத்துக்கும அதிகமான பேருந்துகள் பெண்களுக்கான இலவசப் பயணச் சேவையாக மாற்றப்பட்டுள்ளன.

சாதாரண கட்டணத்தில் இயங்கும் விரைவுப் பேருந்துகள் உள்பட வெற்றிப் பயணம் வில்லை ஒட்டப்பட்ட அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் முற்றிலும் இலவசமாகப் பயணிக்கலாம்.

திருப்பூரில் இருந்து அவிநாசி, பல்லடம் வழியாக கோவை, ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் பழனிக்கும், காங்கயத்தில் இருந்து வெள்ளக்கோவில் மற்றும் ஈரோட்டுக்கும், பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கோவைக்கும், தாராபுரத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி மற்றும் பழனிக்கும், உடுமலையில் இருந்து திருப்பூா், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லலாம் எனத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments