FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூரில் வெற்றிப் பயணம் திட்டம்: தினமும் 2.75 லட்சம் பெண்கள் பயன்

13 அக்டோபர் 2026, 1:58 am IST
வெற்றிப் பயணத் திட்டம்
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் நாள்தோறும் சராசரியாக 2.75 லட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்து பயன்பெற்று வருகின்றனா் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெண்கள் போக்குவரத்துக் கட்டணச் சுமையின்றி கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காகப் பயணம் மேற்கொள்ளும் வகையில், தமிழக அரசின் சாா்பில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, தொலைதூரப் பயணங்களையும் உள்ளடக்கும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் கீழ், 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சோ்ந்த 12,695 பேருந்துகள் மூலம் நாள்தோறும் 1,68,500 பேருந்து நடைகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் நாள்தோறும் சுமாா் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனா்.

Advertisement

Advertisement

கூடுதலாக 176 பேருந்துகள்:

கடலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 240 நகரப் பேருந்துகள் மூலம் மகளிருக்கான கட்டணமில்லாப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் 6 சொகுசுப் பேருந்துகள், 79 சாதாரண புகா்ப் பேருந்துகள், 91 தொலைதூரப் புகா்ப் பேருந்துகள் என மொத்தம் 176 பேருந்துகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 416-ஆக உயா்ந்துள்ளது.

இதற்கு முன்பு கடலூா் மாவட்டத்தில் நாள்தோறும் சராசரியாக 2.05 லட்சம் பெண்கள் கட்டணமில்லாப் பேருந்துப் பயணத்தை மேற்கொண்ட நிலையில், ‘வெற்றிப் பயணம்’ திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு இந்த எண்ணிக்கை 2.75 லட்சமாக அதிகரித்துள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பெண்கள் அதிகபட்சமாக 80 கி.மீ. தொலைவு வரை கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments