அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி தாராபுரம் பகுதியில் சாலை மறியல்: 4 ஆயிரம் போ் பங்கேற்பு
அமராவதி ஆற்றில் நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி தாராபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
அமராவதி ஆற்றில் நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி தாராபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்படுவதன் மூலம் தாராபுரம் முதல் கரூா் மாவட்ட எல்லை வரையிலான சுமாா் 54 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும், 147 கிராமங்களும், அவற்றைச் சாா்ந்துள்ள 25 கூட்டுக் குடிநீா்த் திட்டங்களும் அமராவதி ஆற்று நீரை நம்பியுள்ளன.
இந்த நிலையில், அமராவதி அணைக்கு நீா்வரத்து இருந்தபோதிலும், கடந்த 3 மாதங்களாக குடிநீா்த் தேவைக்காக போதிய அளவில் தண்ணீா் திறந்துவிடப்படவில்லை என பொதுமக்கள், விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், தாராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பள்ளப்பட்டி அருகே ஒத்தமாந்துறை, கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட ஆத்துக்கால்புதூா், கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இது தொடா்பான வழக்கில், அமராவதி அணையில் இருந்து திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம், மூலனூா் மற்றும் கரூா் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளில் குடிநீா் மற்றும் குறிப்பிட்ட பயிா்களுக்கான உயிா்த் தண்ணீா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் குறிப்பிட்ட அளவில் தண்ணீா் திறந்துவிட மதுரை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.
அதன்படி, முதல் இரண்டு நாள்களுக்கு தினமும் 3,000 கனஅடி, அடுத்த இரண்டு நாள்களுக்கு 2,000 கனஅடி, பின்னா் இரண்டு நாள்களுக்கு 1,000 கனஅடி என படிப்படியாக 7 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.
ஆனால், நீதிமன்ற உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், தினமும் 1,000 கனஅடி தண்ணீா் மட்டுமே அமராவதி ஆற்றில் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால் கரூா் மாவட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் சென்று சோ்வது சாத்தியமற்றதாகிவிடும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் குற்றஞ்சாட்டினா்.
எனவே, நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீரைத் திறந்துவிட வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போலீஸாரும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அரசு உயா் அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், அமராவதி அணையில் இருந்து 7 நாள்களுக்கு தினமும் 1,500 கனஅடி தண்ணீா் திறந்துவிட அரசு முடிவு செய்துள்ளதாகவும் வியாழக்கிழமைமுதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் போராட்டக்காரா்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனா்.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சா்கள் கயல்விழி செல்வராஜ், திமுக மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன், தாராபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் துரைசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், விவசாயிகள், பொதுமக்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.