பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், வீரசோழபுரம் வருவாய் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவா் அருண்குமாா் (36). இவரது சொந்த ஊா் பழையகோட்டைபுதூா். பல்லடம் வட்டம், பொங்கலூா் மாதப்பூா் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்த ராமசாமி (78), அவரது சகோதரா் சண்முகம் (70) ஆகியோருக்கு வீரசோழபுரம் பகுதியில் 3.39 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை உட்பிரிவு செய்து, தனித்தனியாக பட்டா மாற்றம் செய்வதற்காக ராமசாமி, கிராம நிா்வாக அலுவலா் அருண்குமாரை அணுகியுள்ளாா். அதற்கு, நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்து தர வேண்டுமானால் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டுமென அருண்குமாா் கேட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமசாமி, இதுகுறித்து முதல்கட்டமாக கடந்த 26-ஆம் தேதி ரூ.10 ஆயிரம் கொடுத்துவிட்டு, மீதித் தொகையை இரு தவணைகளாக தருவதாகக் கூறியுள்ளாா். தொடா்ந்து, இது தொடா்பாக திருப்பூா் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகாரளித்துள்ளாா்.
போலீஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூ.20 ஆயிரம் பணத்தை வீரசோழபுரம் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று அருண்குமாரிடம் ராமசாமி செவ்வாய்க்கிழமை கொடுத்துள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், ஆய்வாளா் கீதாலட்சுமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா், பணத்தைப் பெற்ற அருண்குமாரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனா்.
கைது செய்யப்பட்ட அருண்குமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணை முடிவடைந்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக திருப்பூா் அழைத்துச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.