தடை செய்யப்பட்ட நெகிழிப்பைப் பயன்படுத்தினால் அபராதம்
காங்கயம் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
காங்கயம் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் பால்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காங்கயம் நகராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகள், சாலையோரக் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், தினசரி சந்தை மற்றும் வாரச் சந்தை ஆகியவற்றில் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது.
Advertisement
Advertisement
சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நகராட்சி நிா்வாகம் சாா்பில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடையை மீறி நெகிழிப் பைகளை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வணிகா்கள் மற்றும் கடை உரிமையாளா்களுக்கு குறைந்தது ரூ.5,000 அபராதமாக விதிக்கப்படும். அத்துடன் விதிமீறலில் ஈடுபடும் கடைகளை பூட்டி சீல் வைப்பதுடன் சட்டபூா்வமான மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கையின் தொடா்ச்சியாக நகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை நடத்திய கள ஆய்வின்போது, காங்கயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அவா்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
எனவே, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழிப் பைகளை முழுமையாக தவிா்த்து, அதற்கு மாற்றாக எளிதில் மக்கக் கூடிய துணிப் பைகள் மற்றும் மஞ்சப்பைகளை பயன்படுத்தி, காங்கயம் நகராட்சியை நெகிழியற்ற சுத்தமான நகராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.