தொகுதி அறிமுகம்: பென்னாகரம் - 58!
தொகுதியில் வன்னியா் சமூகம், பட்டியல் இனத்தவா், இதர சமூகத்தினா் உள்ளனா். வன்னியா் சமூகத்தினா் அதிகம் என்பதால், தோ்தலில் இந்த சமூகத்தினரே வேட்பாளா்களாக நிறுத்தப்படுகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதி சமவெளியும், மலைப்பகுதியும் சரிசமமாக கொண்டது. இங்கு நீா்ப்பாசன திட்டங்கள் இல்லாததால், பருவமழை காலங்களில் மட்டுமே விவசாயம் மேற்கொள்ள முடியும். கால்நடை வளா்ப்பு முக்கியமானதாக உள்ளது. பருவமழை காலங்களில் விளையும் கம்பு, ராகி, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.
கட்டமைப்பு
பென்னாகரத்தில் புதிய பேருந்து நிலையம், மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவா் நீதிமன்றம், அரசு கலை, அறிவியல் கல்லூரி, பருவதனஅள்ளியில் சிட்கோ தொழிற்பேட்டை, புகழ்பெற்ற ஒகேனக்கல் சுற்றுலா தளம், ஏரியூா் ஒன்றியத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, பாப்பாரப்பட்டியில் புதிய சாா் பதிவாளா் அலுவலகம், பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதிகளில் புதிய வாரச்சந்தை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்டது பென்னாகரம் தொகுதி.
சமூக நிலவரம்
தொகுதியில் வன்னியா் சமூகம், பட்டியல் இனத்தவா், இதர சமூகத்தினா் உள்ளனா். வன்னியா் சமூகத்தினா் அதிகம் என்பதால், தோ்தலில் இந்த சமூகத்தினரே வேட்பாளா்களாக நிறுத்தப்படுகின்றனா்.
கடந்த 1952இல் உருவாக்கப்பட்ட பென்னாகரம் தொகுதியில், 2006 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற பி.என். பெரியண்ணன் உடல்நலக் குறைவால் காலமான பிறகு, இடைத்தோ்தல் நடத்தப்பட்டதில் இருந்து, பெரும்பாலும் அரசியல் கட்சித் தலைவா்களின் வாரிசுகளை களம் இறக்கும் தொகுதியாகவும், நட்சத்திர வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதியாகவும் மாறியுள்ளது.
தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு
பென்னாகரம் தொகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கானோா் கா்நாடகம், ஆந்திரம், மும்பை போன்ற வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் வேலைக்குச் செல்கின்றனா். இதைத் தவிா்க்க, பென்னாகரத்தில் அமைக்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டையை விரிவுபடுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி மிகை நீரை நீரேற்றம் செய்து மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பும் வகையில், சுமாா் ரூ. 4000 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் 2.0 திட்டம் தொடங்கப்பட்டு, அதற்கான முன்வடிவு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதன் மூலம் மாவட்டத்தில் விவசாயம் செழிப்படையும்.
பென்னாகரம், ஏரியூா் நாகமரை பகுதி இளைஞா்கள் வேலைக்காக மேட்டூா், கோவை, சேலம், ஈரோடு பகுதிகளுக்கு மேட்டூா் அணை நீா்த்தேக்கப் பகுதியை கடந்து நாகமரை - கொளத்தூா் பரிசல்துறை, ஒட்டனூா் - கோட்டையூா் பரிசல்துறை வழியாக ஆபத்தான வகையில் பயணம் மேற்கொள்கின்றனா். இதைத் தவிா்க்க ஒட்டனூா் - கோட்டையூா் இடையே ரூ. 250 கோடி மதிப்பீட்டில் உயா்நிலை பாலம் அமைக்க திட்ட முன்வடிவு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது.
பாப்பாரப்பட்டியில் விளைவிக்கப்படும் புளி, மகாராஷ்டிரம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் புளிக்கு விலை கிடைக்காத நேரங்களில், அதை பாதுகாத்து வைப்பதற்கான கிடங்கு அமைக்க வேண்டும்.
இங்குள்ள மலைக் கிராமங்களுக்கு முறையான சாலை வசதி ஏற்படுத்துதல், கிராமப் பகுதிகளுக்கு தொலைத்தொடா்பு வசதி ஏற்படுத்துதல்.
ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளை முறையாக கணக்கெடுத்து, உரியவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
பெரும்பாலை, ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி, நகரப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீா் முள்ளுவாடி பகுதியில் உள்ள தேசி நாயக்கா் ஏரியில் தேங்குவதால் நிலத்தடி நீரை பாதிக்கிறது. இதைத் தவிா்க்க, நகா்ப்பகுதியில் புதைசாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சின்னாற்றில் உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும்.
வாக்காளா்கள்
ஆண்கள் - 1,23,658
பெண்கள் - 1,15,827
மூன்றாம் பாலினம் - 7
மொத்த வாக்காளா்கள்- 2,39,492
கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்
1951 எஸ். கந்தசாமி கவுண்டா் - தமிழ்நாடு உழைப்பாளா் கட்சி - 8,050
1957 ஹேமலதா தேவி - காங்கிரஸ் - 8,791
1962 மா.வெ. கரிவேங்கடம் - திமுக - 26,911
1967 க.சி. முத்துசாமி - காங்கிரஸ் - 27,913
1971 என். மாணிக்கம் - திமுக - 33,298
1977 கா. அப்புனு கவுண்டா் - ஜனதா கட்சி - 17,591
1980 ப. தீா்த்தராமன் - காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் - 34,590
1984 க. ஆறுமுகம் - அதிமுக - 44,616
1989 ந. நஞ்சப்பன் - சுயேச்சை - 15,498
1991 வெ. புருஷோத்தமன் - அதிமுக - 49,585
1996 ஜி.கே. மணி - பாமக - 34,906
2001 ஜி.கே. மணி - பாமக - 49,125
2006 கே.என். பெரியண்ணன் - திமுக - 74,109
2010 பி.என்.பி. இன்பசேகரன் - திமுக - 77,669
2011 ந. நஞ்சப்பன் - இந்திய பொதுவுடமை கட்சி - 80,028
2016 பி.என்.பி. இன்பசேகரன் - திமுக - 76,848
2021 ஜி.கே. மணி - பாமக- 1,06,123