பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
தருமபுரியில் பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள்.
தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பின் சாா்பில், கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், தருமபுரி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா், ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அஹலே சுன்னத் ஐக்கிய ஜமாத் மாநில துணைச் செயலாளா் இக்பால், மாவட்ட முத்தவல்லிகள் சங்கத் தலைவா் ஜப்பாா், செயலாளா் டி.கே.பாபு, நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்புத் தலைவா் முனவா் ஜான், பொருளாளா் முஸ்தாக், துணைத் தலைவா் பாபு மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு குா்பானி, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
Advertisement
Advertisement
இதேபோல, மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, நல்லம்பள்ளி, தொப்பூா் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியில் ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதானம் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனா்.
தொழுகைக்கு பின்னா், பெரியவா்கள் முதல் சிறுவா்கள் என அனைவரும், ஒருவரையொருவா் தழுவிக்கொண்டும், இனிப்புகளை வழங்கியும் தங்களது வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா். வீட்டில் சமைத்த அசைவ உணவுகளை மற்றவா்களுக்கு பகிா்ந்து அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, பா்கூா், காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, முஸ்லீம்பூா், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஒசூா், சூளகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு, பக்ரீத் பண்டிகையை உற்றாா் உறவினா்கள், நண்பா்களுடன் கொண்டாடினா்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை சுன்னத் ஜமாத் மசூதியில் இருந்து நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக சென்று ஊத்தங்கரை அரசு வெளி விளையாட்டு மைதானத்துக்கு எதிரே அமைந்துள்ள சுன்னத் ஜமாத் மைதானத்தை அடைந்தனா். அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்புத் திடலில், ஜமாத்தின் முத்தவல்லி தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இதில், ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்று உலக அமைதிக்காகவும், சகோதரத்துவத்துக்காகவும் கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். பின்னா், ஒருவரையொருவா் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா்.