FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை

தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசாணையை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 9:29 am IST
பகிர்:

தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசாணையை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
தருமபுரி நகரின் மையப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, புறநகரப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இப் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஈரோடு, பெங்களூரு, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு புற நகரங்களுக்கும், மாவட்டத்திற்குள் அமைந்துள்ள அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும்  நாள்தோறும் 532 பேருந்துகள் சென்று வருகின்றன.
40 ஆண்டுகளை கடந்த இப்பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. நெரிசலைத் தவிர்க்கவும், பெருகிவரும் மக்களைதொகைக்கேற்ப அவர்களுக்கு போதிய வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைத்திடவும், தருமபுரியில் புதியதாக பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக ஏற்கெனவே, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.  இதைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கோப்புகள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், இப் பேருந்து நிலையம், தனியார் பங்களிப்பு நிதியுடன் அமைக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து, தருமபுரியைச் சேர்ந்த தனியாரிடமிருந்து பேருந்து நிலையம் அமைக்க சுமார் 10 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டது. இந்த இடம் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில், தருமபுரி-பென்னாகரம் மாநில நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது.
இந்த இடத்தில், தருமபுரி புதிய பேருந்து நிலையம் தனியார் பங்களிப்பு நிதியுடன் அமைக்கப்படும் என கடந்த 2017-இல் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, தானமாக பெற்ற இடத்தை நகராட்சி ஆணையர் பெயருக்கு பதிவு செய்வது, மண் பரிசோதனை, பேருந்து நிலையத்தின் மாதிரி தோற்றம் வரைப்படம் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தருமபுரி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தருமபுரி சோகத்தூரில் தனியார் பங்களிப்புடன் ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
தனியார் பங்களிப்பு நிதியுடன் அமைக்கப்பட உள்ள, பேருந்து நிலையத்தை கட்டமைப்பதற்கான திட்டமிடல், கட்டுமானம், இயக்கம் ஆகிய அனைத்தையும் தனியாரே மேற்கொள்ள வேண்டும். இதற்காக, 18 ஆண்டுகளுக்கு இப் புதிய பேருந்து நிலையம் பராமரிப்பு, இயக்க அனுமதி ஆகிய அனைத்தும் நிலம் வழங்கி பேருந்து நிலையம் அமைக்கும் தனியாரிடமே ஒப்படைக்கப்பட உள்ளது.  
தருமபுரி பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இனி ஏனைய பணிகள் தொடங்கப்பட்டு, விரைவில் தருமபுரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments