பொங்கல் விற்பனைக்கு தயார் நிலையில் மண் பானைகள்!
தருமபுரி மாவட்டத்தில், பொங்கல் திருநாளுக்கு விற்பனை செய்வதற்காக மண் பானைகளை மண் பாண்டத்
தருமபுரி மாவட்டத்தில், பொங்கல் திருநாளுக்கு விற்பனை செய்வதற்காக மண் பானைகளை மண் பாண்டத் தொழிலாளர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
தமிழர் திருநாள் தைப் பொங்கலையொட்டி, மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது இன்றளவும் வழக்கமாக உள்ளது. நகர்ப்புறங்களில் இத்தகைய நடைமுறை பெரும்பாலும் மாறிப் போனாலும், கிராமப் புறங்களில் பரவலாக மண் பானை வைத்து பொங்கலிட்டு வழிபடுவது தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில், கிராமப்புறங்களே அதிக எண்ணிக்கையில் உள்ளதால், பொங்கல் பானைகளுக்கு எப்போதும் மவுசு உண்டு. சுமார் 10 முதல் 15 நாள்களுக்கு முன்பே, தங்களுக்குத் தேவையான பானைகளை, கிராமப்புற மக்கள் உள்ளூர் சந்தைகளுக்கு வரும்போது வாங்கிச் செல்கின்றனர். ஆகவே, பொங்கல் விற்பனைக்காக, மண்பாண்டத் தொழிலாளர்கள், ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடியில் இருந்து பானை உற்பத்தியைத் தொடங்கிவிடுகின்றனர். இதற்காக, அனுமதிபெற்ற ஏரிகளில் மண் எடுத்து, அவற்றை பதப்படுத்தி, பானைகளை உருவாக்குகின்றனர்.
பின்பு, சூளைகளில் வைத்து சுட்டு, நல்ல பதமான நிலையில் பானைகள் தயாரான பின்பு அவற்றை எடுத்து அங்கேயே அடுக்கிவைக்கின்றனர். பொங்கல் விற்பனையில் கிடைக்கும் வருவாயை எதிர்பார்த்து ஏறக்குறைய 6 மாதங்கள் கடுமையாக அத் தொழிலாளர்கள் உழைக்கின்றனர். தருமபுரி மாவட்டத்தில், முன்பெல்லாம், எல்லா ஊராட்சிகளிலும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் இத் தொழிலாளர்கள் பானை உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும், கால மாற்றத்தால், தற்போது மிக சொற்ப எண்ணிக்கையில் மட்டும் இத் தொழிலாளர்கள் மண் பானைகள், அகல் விளக்குகள், பூந்தொட்டிகள், அடுப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இதில், பென்னாகரம் அருகேயுள்ள நலப்பரம்பட்டி, பழைய தருமபுரி அருகேயுள்ள மல்லிக்குட்டை, கிருஷ்ணாபுரம், அதியமான்கோட்டை, மாதேமங்கலம் ஆகிய கிராமங்களில் மட்டும் இன்றளவும் மண் பாண்டங்கள் தயாரிப்பில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில், நலப்பரம்பட்டியில் மட்டுமே 34 குடும்பத்தினர் இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் விற்பனைக்காக, தற்போது சிறியது முதல் பெரிய அளவிலான பானைகள் வரை உற்பத்தி செய்து இவர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர். ரூ. 15
முதல் அதிகபட்சம் ரூ.300 வரையிலான
விலையில் பானைகளை விற்கின்றனர்.
நாகரிகம், கால மாற்றம் எனக் கூறி, பழமைக்கு விடை கொடுத்துள்ளவர்கள், மீண்டும் பாரம்பரிய மண்வாசனையோடு தங்களது மண்பானைகளை வாங்கி, அதில் பொங்கலிட்டு தைத்திருநாளைக் கொண்டாட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்பதும், அதேபோல, இத் தொழிலை ஊக்குவிக்க தாராளமாக மண் எடுக்கவும், சூளை அமைத்து மண் பாண்டங்களைச் சேகரித்து வைக்க பொது இடம், வேலை வாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்டவற்றை அரசு வழங்கிட முன்வர வேண்டும் என்பதும் இத் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
பானைகள் வாங்க ஆர்வம்!
தைத் திருநாள் நெருங்கிவிட்டதால், தற்போது தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பானைகளை விற்பனை செய்வதில் அவர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர். தங்களது கிராமங்களை தவிர்த்து, தருமபுரி, பென்னாகரம், காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு பானைகளைக் கொண்டு செல்கின்றனர். இவற்றை பொதுமக்கள் இப்போதே ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.