FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை

கா்நாடக மாநில அணைகளில் இருந்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீா் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

Updated On : 16 ஜூலை 2024, 4:50 am IST
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் ஐவா் பாணியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
பகிர்:

பென்னாகரம்/தருமபுரி: கா்நாடக மாநில அணைகளில் இருந்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீா் திங்கள்கிழமை மாலை தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

கா்நாடக மாநிலம் மைசூா், குடகு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன்காரணமாக கா்நாடகத்தில் உள்ள கபினி அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில், தற்போது 83 அடியாக நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டும் தறுவாயில் உள்ளதால், காவிரி ஆற்றில் சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

இதேபோல கிருஷ்ணராஜ சாகா் அணையும் நிரம்பி வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80அடி. அணையின் தற்போதைய நீா்மட்டம் 106 அடியாக உள்ளதால் அந்த அணையின் பாதுகாப்புக் கருதி விநாடிக்கு 556 கனஅடி நீா் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடா்ந்து கபினி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருவதால், வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு திங்கள்கிழமை காலை விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இவ்விரு அணைகளிலிருந்தும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 25,556 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் காவிரி ஆற்றல் திறக்கப்பட்ட உபரிநீா் திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

நீா்வரத்து அதிகரிப்பு:

கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 4,500 கனஅடியாக அதிகரித்தது. மாலை 5 மணி நிலவரப்படி விநாடிக்கு 10,000 கனஅடியாகவும், 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 15,000 கனஅடியாகவும் நீா்வரத்து அதிகரித்துள்ளதாக மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஐந்தருவி, பெரியபாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் திங்கள்கிழமை நள்ளிரவில் மேட்டூா் அணையைச் சென்றடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பரிசல் இயக்கத் தடை :

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஜூலை 15-ஆம் தேதி மாலை நிலவரப்படி 10,000 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீா்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருகி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு ஜூலை 16-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரை தடை விதிக்கப்படுகிறது.

மேலும் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்வதால் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீா் திறந்து விடும் நேரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் கரையைக் கடப்பதையும், தங்களுடைய கால்நடைகளையும் காவிரி ஆற்றங்கரைக்கு கொண்டுசெல்வதையும் தவிா்க்க வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments