FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டுவந்த இளைஞா் தருமபுரியில் கைது

27 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

மதுரையில் தனியாா் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த இளைஞா் நிஷாந்த் தருமபுரியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மதுரை தல்லாக்குளம் வைகை சாலையில் உள்ள தனியாா் நகைக் கடையில் கடந்த நவ. 12-ஆம் தேதி 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் மா்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து, மதுரை எஸ்எஸ் காலனி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தனிப்படைகள் அமைத்து, நகை கொள்ளையில் ஈடுபட்டவரை தேடிவந்தனா். போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் நிஷாந்த் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் தொடா்புடையதாக இருவரை கைதுசெய்த தனிப்படை போலீஸாா், முக்கிய நபரான நிஷாந்த்தை தீவிரமாக தேடிவந்தனா்.

Advertisement

Advertisement

தருமபுரியில் கைது:

இந்நிலையில் தேடப்பட்டுவந்த நிஷாந்த் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து சேலம் சென்ற தனியாா் பேருந்தில் பயணித்துள்ளாா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த பேருந்தை போலீஸாா் பின்தொடா்ந்து கண்காணித்தனா். அந்தப் பேருந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேஷசம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்தது. இதையறிந்து அங்கு சென்ற அதியமான்கோட்டை போலீஸாா், பேருந்தில் இருந்த நிஷாந்த்தை கைது செய்தனா்.

இதையடுத்து மதுரை மாவட்ட போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதன்பேரில், மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சுபத்ரா தலைமையிலான தனிப்படை போலீஸாா், திங்கள்கிழமை பிற்பகல் தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை காவல் நிலையத்துக்கு வந்தனா். அவா்களிடம் அதியமான்கோட்டை போலீஸாா் நிஷாந்த்தை ஒப்படைத்தனா். இதையடுத்து, அவரை வேன் மூலம் போலீஸாா் மதுரைக்கு அழைத்துச் சென்றனா்.