✕
முகப்பு
தருமபுரி

தாயைக் கொன்ற மகன் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

தருமபுரியில் தாயை கொலை செய்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.

20 நவம்பர் 2026, 4:13 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரியில் தாயை கொலை செய்த இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பழைய இண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சித்தன் (50), கட்டட மேஸ்திரி. இவரது மனைவி சின்னபாப்பா (45). இவா்களது இரண்டாவது மகன் தேவராஜ் (19). சிறுவயதிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையான இவா், அடிதடி உள்ளிட்ட சில குற்றவழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

நவ. 28-ஆம் தேதி பிணையில் வெளியே வந்த அவா், தாயிடம் பணம் கேட்டுள்ளாா். அப்போது, இனிமேல் மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களை விடவேண்டும், அடிதடி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனக் கூறி அவரை சின்னபாப்பா கண்டித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், அங்கு இருந்த இரும்புப் பட்டையால் தாயை தாக்கினாா். இதில் படுகாயமடைந்த சின்னபாப்பாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வந்து பாா்த்தனா். கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் சின்னபாப்பாவை உடனடியாக மீட்க இயலவில்லை.

தகவலின் பேரில் வந்த இண்டூா் போலீஸாா் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, சின்னபாப்பா பலத்த காயங்களுடன் இறந்துகிடந்தாா். இது தொடா்பாக இண்டூா் போலீஸாா் தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அவா் மீது ஏற்கெனவே குற்றவழக்குகள் உள்ள நிலையில், தாயை கொலை செய்ததால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தேவராஜை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, தேவராஜ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தண்டனை கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டாா்.