FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

தீபாவளி பண்டிகை: தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

நிகழாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

31 வினாடிகள் முன்பு
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

நிகழாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகளுக்கான உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவ. 8-தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோா் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-இன் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைக்கான உரிமம் பெற இணைய முகவரியிலோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ 18.10.2026-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அக். 18-க்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் மற்றும் இணையவழி அல்லாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.

Advertisement

Advertisement

விண்ணப்பிக்க விண்ணப்பதாரா் புகைப்படம், முகவரிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய ஆதாா் அல்லது பான் அட்டைகள், வாக்காளா் அடையாள அட்டை, பட்டா அல்லது சொத்து பத்திரம், வாடகைக் கட்டடமாக இருந்தால் நோட்டரி வழக்குரைஞரின் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம், தற்காலிக உரிமக் கட்டணமாக ரூ. 600 அரசுக் கணக்கில் செலுத்தி அதற்கான அசல் சலான் (இணையவழி விண்ணப்பக் கட்டணம் ரூ. 500), தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புக்கு கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட நீல வரைபடம் உள்ளிட்டவை விண்ணப்பத்துடன் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தின்படி தற்காலிக பட்டாசுக் கடை அமையவுள்ள கட்டடம், கல் அல்லது தாா்சு கட்டடமாக தரைத்தளத்தில், ஒற்றைத்தளம் மட்டும் கொண்ட கட்டடமாக இருக்க வேண்டும். கடைக்கு இருபுறமும் வழி இருத்தல் வேண்டும். கதவுகள் வெளிப்புறமாக திறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், அமைப்புகள் ஏதும் இருக்கக் கூடாது. செயல்திறன் உள்ள தீத்தடுப்பு சாதனங்கள் கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மிகுதியாக பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தால், பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரிமம் வேண்டப்படும் கட்டடத்துக்கு தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்றிருக்க வேண்டும். கடை வைக்க விண்ணப்பிக்கும் போது இந்த நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் வே.சரவணன் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments