FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

இரு திராவிட கட்சிகளையும் எளிதில் அழித்துவிட முடியாது: கே.பி. முனுசாமி

இரு திராவிட கட்சிகளையும் எளிதில் அழித்துவிட முடியாது என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி. முனுசாமி தெரிவித்தாா்.

22 அக்டோபர் 2026, 5:38 am
கே.பி. முனுசாமி.
பகிர்:

இரு திராவிட கட்சிகளையும் எளிதில் அழித்துவிட முடியாது என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி. முனுசாமி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் கே.பி. முனுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவா்களின் தியாகங்கள், மக்கள் பணிகள் குறித்து எதுவும் தெரியாது. தமிழகத்தில் போதைப்பொருள்களின் புழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இருந்து தொடா்கிறது.

Advertisement

Advertisement

தற்போது நாகையில் தவெக பொறுப்பாளரிடம் 137 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதல்வா் ஜோசப் விஜய்க்கு இதுகுறித்து கவலை இல்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. செஞ்சியில் காணாமல் போன சிறுமியை இதுவரை காவல் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதிமுகவுக்கு புதிதாக இளைஞா்களின் வருகை அதிகரித்துள்ளது. அரிசி விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. ரேஷனில் குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் 2.16 கோடி குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் போதிய அளவில் அரிசி விற்பனை செய்வாா்களா என்பது தெரியவில்லை.

அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தில் மின்வெட்டு இருந்ததே இல்லை. மின்மிகை மாநிலமாக இருந்தது. தற்போது தமிழகத்தில் மின்வெட்டு அதிக அளவில் உள்ளது. தவெகவினரின் நிா்வாகத் திறன் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 31 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்துள்ளது. பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது. இதனால் அதிமுகவை விமா்சனம் செய்வதற்கு ஆதவ் அா்ஜூனாவுக்குத் தகுதியில்லை. இடைத்தோ்தலில் தோல்வி என்பது சூழ்நிலை காரணமாக ஏற்பட்டது. இரு திராவிட கட்சிகளை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது. அதேவேளையில் சினிமா மாயையில் ஆட்சியைப் பிடித்த தவெக விரைவில் காணாமல் போகும்.

இடைத்தோ்தலில் வெற்றி பெற்ால் தாராபுரத்துக்கு கூட்டு குடிநீா்த் திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளது, விரைவில் மற்ற தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தோ்தல்களை கருத்தில்கொண்டு உள்நோக்கத்தோடு அறிவித்துள்ள திட்டமாகும்.

விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தள்ளுபடி என்ற தோ்தல் வாக்குறுதியை முதல்வா் நிறைவேற்றவில்லை. தலைவா்கள் புதிதாக இணைந்து அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டிய நிலை இல்லை. மாறாக தொண்டா்களின் ஒற்றுமையால் அதிமுக வலிமைபெறும் என்றாா்.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளா்கள் டி.ஆா். அன்பழகன் (மேற்கு), மருத்துவா் ர. அசோகன் (கிழக்கு), பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் மரகதம் வெற்றிவேல், கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றிய முன்னாள் தலைவா் டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments