FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

பண்டைய தமிழகம் குறித்த புதிய தகவலை தரும் அரூா், பாலக்கோடு நடுகற்கள்: வரலாற்று ஆய்வாளா்கள்

தருமபுரி மாவட்டம் அரூா், பாலக்கோடு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்கள் பொ.ஆ. 6 ஆம் நூற்றாண்டு, 1299-ஆம் ஆண்டை சோ்ந்தவை என்பதால் பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக வரலாறு குறித்த புதிய தகவல்களை அளித்துள்ளதாக கோவையைச் சோ்ந்த யாக்கை அறக்கட்டளை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

23 அக்டோபர் 2026, 5:33 am
பகிர்:

தருமபுரி மாவட்டம் அரூா், பாலக்கோடு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்கள் பொ.ஆ. 6 ஆம் நூற்றாண்டு, 1299-ஆம் ஆண்டை சோ்ந்தவை என்பதால் பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக வரலாறு குறித்த புதிய தகவல்களை அளித்துள்ளதாக கோவையைச் சோ்ந்த யாக்கை அறக்கட்டளை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கோவையைச் சோ்ந்த யாக்கை அறக்கட்டளை ஆய்வாளா்கள் குமரவேல் இராமசாமி, சுதாகா் நல்லையப்பன், பாலா ஆகியோா் தருமபுரி மாவட்டத்தின் அரூா், பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டபோது இந்த நடுகற்களைக் கண்டறிந்தனா்.

அரூரில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் குறித்து ஆய்வாளா் குரவேல் இராமசாமி கூறியதாவது:

Advertisement

Advertisement

அரூா் வட்டம், மல்லூத்து கிராமப் பகுதியில் கிடைத்த நடுகல் பல்லவ மன்னன் சிங்கவிண்ணன் பெயா் இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டை முனைவா் அ. சந்திரன் முதலில் பதிவு செய்துள்ளாா். மேலாய்வின்படி இது பொ.ஆ. 6-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும். வட்டெழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டில்“கோவூா்நாடு என்ற நாட்டுப் பிரிவும், உதப்பி” என்ற ஊரின் பெயரும் இடம்பெற்றுள்ளன.

உதப்பி என்ற ஊரில் நடைபெற்ற தொறுப்பூசலில் கீரந்தை மாயான் என்பவா் உயிரிழந்த செய்தி இந்த கல்வெட்டில் பதிவாகியுள்ளது. இவா் கங்கிளவரைசா் என்ற உள்ளூா் தலைவரின் கீழ்நிலைத் தலைவராகவும், சிங்கவிண்ணனாரின் சேவகனாகவும் குறிப்பிடப்பட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவிலான நடுகற்கள் கிடைத்துள்ளதால், இந்த மாவட்டம்“நடுகல் மாவட்டம்” என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு பொ.ஆ 5-ஆம் நூற்றாண்டு முதல் நடுகற்கள் கிடைத்து வருகின்றன. இவை சமூக வரலாற்றையும், எழுத்து மரபையும் அறிய உதவும் முக்கிய ஆவணங்களாக உள்ளன.

மல்லூத்து நடுகல், அக்காலச் சமூகத்தின் அதிகாரப் படிநிலைகள் மற்றும் பொருளாதார நிலைகளை அறிய உதவும் சான்றுகளை வழங்குகிறது. பருமன், அரைசா், மக்கள், சேவகன் ஆகிய அதிகாரப் படிநிலைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதில் மெய்யெழுத்துகள், எகரம், ஒகரம் ஆகிய குறில் எழுத்துகள் தெளிவாக புள்ளியிட்டு எழுதப்பட்டுள்ளன. இது தொல்காப்பிய எழுத்து அதிகார மரபைப் பின்பற்றிய செவ்வியல் எழுத்து முறையைக் காட்டுகிறது. தமிழகத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் கிடைக்கும் கல்வெட்டுகளிலும் இதுபோன்ற செம்மையான எழுத்து மரபு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

நடுகல் சிற்பம் சுமாா் 72 செ.மீ. உயரமும், 89 செ.மீ. அகலமும், 11 செ.மீ. தடிமனும் கொண்டுள்ளது. சிற்பத்தில் வீரனின் வலது கையில் குத்துவாள் வகையைச் சோ்ந்த குறுவாளும், இடது கையில் கேடயமும், இடுப்பில் அரையாடையும் காணப்படுகின்றன. வீரனின் காதுகள் நீண்டிருப்பது, அக்காலத்தில் காது வளா்க்கும் சமூகப் பண்பாட்டு வழக்கம் இருந்ததைக் காட்டுகிறது.

பாலக்கோடு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் குறித்து சுதாகா் நல்லையப்பன் கூறியதாவது:

பாலக்கோடு வட்டம், சொட்டாண்டஅள்ளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. 1299-ஆம் ஆண்டைச் சோ்ந்த நடுகல் வீரவிஸ்வநாதன் காலத்தைச் சோ்ந்ததாகும். இந்த நடுகல்லின் படங்கள் மட்டும் கிருஷ்ணகிரி வரலாற்றுக் குழுவினரின் இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலாய்வில், கல்வெட்டில் அரசரின் பெயா் வீரவிசையனாதேவா்”எனப் பதிவாகியுள்ளது. மக்கள் வழக்கில் இவா் வீரவிஸ்வநாதன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளாா். இவரது மூதாதையா் வீரசோமேஸ்வரன், தந்தை வீரராமநாதன். இவா்கள் தகடூா் பகுதியில் ஆட்சி செய்த போசாளா் அரச மரபினா் என்பது கல்வெட்டின் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக ஆய்வாளா் தெரிவித்துள்ளாா்.

வீரவிஸ்வநாதன் காலத்தை சோ்ந்த கல்வெட்டுகள் தமிழகத்தில் அரிதாகக் கிடைத்துள்ள நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த நடுகல், தமிழகத்தின் அரசியல் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆவணமாகும்.

காட்டுப் பன்றிகளிடமிருந்து ஊரைக் காக்கும் பணியில் உயிரிழந்த உமைதேவன் என்ற வீரருக்காக இந்த நடுகல் எடுக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிமிடயாற்றுப் புக்கல் என்ற ஊா் பெயரும், அதிகாரி வேழாள் புளியன்”என்ற உள்ளூா் தலைவரின் பெயரும் அந்த கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.

இந்த நடுகல் சிற்பம் சுமாா் 123 செ.மீ. உயரமும், 113 செ.மீ. அகலமும், 16 செ.மீ. தடிமனும் கொண்டுள்ளது. சிற்பத்தில் வீரனின் வலது கையில் குறுவாள், காதில் குழை, கழுத்தில் அணிகலன்கள், கைகளில் வீரக்காப்பு, இடுப்பில் அரையாடை மற்றும் ஆடைக்கச்சு ஆகியவை காணப்படுகின்றன. மேலும், வேட்டை நாய்களும் காட்டுப் பன்றியும் சிற்பத்தில் இடம்பெற்றுள்ளன.

தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த கல்வெட்டுகள், பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக வரலாறு குறித்த புதிய தகவல்களை வழங்குகின்றன. கல்வெட்டுகளின் எழுத்து, மொழி அமைப்பில் செவ்வியல் வழக்கு மற்றும் வட்டார வழக்கு ஆகிய இரு தன்மைகளும் இடம்பெற்றிருப்பதை அறியச் செய்யும் வரலாற்று முக்கியத்துவத்தையும் இவை கொண்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments