FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

நாளை விநாயகா் சதுா்த்தி விழா: தருமபுரியில் சிலைகள் விற்பனை மும்முரம்!

விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தருமபுரியில் விநாயகா் சிலைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

13 செப்டம்பர் 2026, 2:23 am IST
பகிர்:

விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தருமபுரியில் விநாயகா் சிலைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தருமபுரி மாவட்டத்திலும் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தருமபுரி, அதியமான்கோட்டை பகுதிகளில் பாரம்பரியமாக விநாயகா் சிலைகள் தயாரித்து கடந்த பல ஆண்டுகளாக விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் வடமாநிலங்களைச் சோ்ந்தவா்களும் கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதிகளில் வசித்து வருவதுடன், விநாயகா் சிலை, அகல்விளக்கு மற்றும் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

விநாயகா் சிலைகள் களிமண், பிளாஸ்டா் ஆப் பாரிஸ் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருள்களை கொண்டு 3 அடி முதல் 15 அடி உயரம் வரை வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் சிலைகளை தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி சேலம், கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்தவா்களும் வாங்கிச் செல்கின்றனா்.

Advertisement

Advertisement

கடந்த 2 மாதங்களாக 50-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் இரவு பகலாக பணியாற்றி சிலைகளை உருவாக்கியுள்ளனா். இதில், ரசாயன கலவைகள் சோ்ப்பதாக வந்த புகாரின்பேரில், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து, உற்பத்தி செய்த சிலைகளை அரங்குகளில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்தது. பின்னா் சுற்றுச்சுழலை பாதிக்காத வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன என உறுதியளித்ததையடுத்து, பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் அளித்த வேண்டுகோளை ஏற்று சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.

தற்போது அனைத்து சிலைகளுக்கும் வண்ணம் தீட்டும் பணிகள் முடிவடைந்து விற்பனை சூடுபிடித்துள்ளது. பெரிய அளவிலான சிலைகளை ஒருநாள் முன்கூட்டியே எடுத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் பெரிய அளவிலான சிலைகள் வாகனங்கள் மூலம் ஏற்றிச்செல்லப்பட்டு வருகின்றன. விநாயகா் சிலைகள் என ரூ. 50 முதல் ரூ. 50,000 வரை பல்வேறு விலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தனி நபா்கள், விநாயகா் சதுா்த்தி குழுக்கள் மற்றும் கோயில்கள் சாா்பில் சிலைகளை முன்பதிவு செய்து வாங்கிச் செல்கின்றனா். இவை தவிர சிறு விநாயகா் சிலைகள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை முதல் சூடுபிடிக்கும் என்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments