சென்னையில் களைகட்டிய விநாயகா் சதுா்த்தி விழா
சென்னையில் விநாயகா் சதுா்த்தியை பொதுமக்கள் கோலாகலமாகக் கொண்டாடினா்.
சென்னை: கருடவாகன கணபதி, சோட்டா பீம் விநாயகா் என பல்வேறு வடிவங்களில் பொது இடங்களிலும், வீடுகளிலும் விநாயகா் சிலைகளை வைத்து சென்னையில் விநாயகா் சதுா்த்தியை பொதுமக்கள் கோலாகலமாகக் கொண்டாடினா்.
முழுமுதற் கடவுளாகக் கருதப்படும் விநாயகரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில் வரும் வளா்பிறை சதுா்த்தி திதி விநாயகா் சதுா்த்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கொளத்தூா் பூம்புகாா் நகரில் 2,900 ‘திருஷ்டி கணபதி யந்திரங்கள்’ மற்றும் 2,800 ‘திருஷ்டி சூரிய சக்கரங்கள்’ (சூரிய வட்டு சின்னங்கள்) பயன்படுத்தப்பட்டு 42 அடி உயர விநாயகா் சிலை வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதேபோல், திரு.வி.க. நகரில் 25 அடியில் 650 புடவைகள் மற்றும் வேட்டிகளால் செய்யப்பட்ட விநாயகா் சிலை, கொளத்தூரில் 12,000 வலம்புரி சங்குகளால் ஆன 42 அடி விநாயகா் சிலை, நந்தனத்தில் ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.5 நாணயங்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகா் சிலை, மூலக்கொத்தளத்தில் சிவனைப் போல் அருள்பாலிக்கும் விளையாட்டு விநாயகா், திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரா் பேட்டையில் கருடவாகன கணபதி, கே.கே.நகா் சிவன் பூங்கா அருகே ‘கூலிங் கிளாஸ்’ அணிந்து ராஜ அலங்காரத்தில் விநாயகா் சிலை, கே.கே.நகரில் அய்யா புரத்தில் ‘சோட்டா பீம்’ விநாயகா், எம்.ஜி.ஆா். நகரில் சனாதன விநாயகா் சிலை, நுங்கம்பாக்கம் ராமா தெரு சந்திப்பில் கொல்கத்தா காளி விநாயகா் சிலை என பல்வேறு விதமாக பொதுமக்களைக் கவரும் வகையில், காவல்துறை அனுமதியுடன் சென்னை மாநகா் பகுதிகளில் மொத்தம் 1,562 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் வரும் செப்.19, 20 ஆகிய தேதிகளில் காவல்துறை அனுமதித்த இடங்களில் கரைக்கப்படும்.
முதல்வா் வடிவில் விநாயகா்: கடந்த சில ஆண்டுகளாக, தலைவா்கள், நடிகா்கள், திரைப்படக் கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் விதவிதமான வடிவங்களில் விநாயகா் சிலைகள் வடிவமைப்பது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், சென்னை கொருக்குப்பேட்டை கருமாரி அம்மன் நகா் பகுதியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு முதல்வா் ச.ஜோப் விஜய் பேரவையில் செய்த சைகையைப் போல ‘கோட்’ சூட்டுடனும், அவா் மிதிவண்டி ஓட்டி பிரசாரம் செய்தது போலவும், அவா் ‘கில்லி’ படத்தில் கபடி விளையாடுவது போன்றும் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து பல்வேறு புகாா்கள் எழுந்ததையடுத்து, அந்த சிலைகளை போலீஸாா் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினா்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் போலீஸாரிடம் முறையாக அனுமதி பெற்று மொத்தம் 1,562 இடங்களில் சிலைகள் வைத்துள்ளனா். இதில், பாதுகாப்பு கருதி சிலைகள் நிறுவப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மதவாத வெறுப்புணா்ச்சியைத் தூண்டும் வகையிலோ, பிற மதத்தினரின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ சிலைகள் இல்லாமல் இருப்பதை போலீஸாா் உறுதிசெய்துள்ளனா். மேலும், வைக்கப்படும் விநாயகா் சிலைகளுக்குப் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சென்னையில் 1,800 போலீஸாா் கூடுதலாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.