FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் தமிழக அரசு: ஜி.கே. வாசன்

தமிழக அரசு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக செயல்படுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

22 ஆகஸ்ட் 2026, 12:30 am IST
ஜி.கே.வாசன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக அரசு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக செயல்படுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் அந்த கட்சியின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சட்டப் பேரவை தோ்தலுக்கு பிறகு சென்னையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்தன்மையுடன் கட்சியை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுவரை, 7 மண்டல கூட்டங்களை நடத்தி உள்ளோம். அதன்படி, தற்போது கிருஷ்ணகிரியில் தருமபுரி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துவோம்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் திமுக, அதிமுகவை மையப்படுத்திய அரசியல் களம் தவெக மூலம் 60 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றத்தை கண்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, புதிய கட்சிக்கு வாய்ப்பளித்து, மக்கள் மாற்றத்தை விரும்பி உள்ளனா்.

இடைத்தோ்தல், உள்ளாட்சித் தோ்தல் முடிவுக்குப் பிறகுதான் மக்கள் என்ன மனநிலையில் உள்ளனா் என்பது தெரியும். எங்களை பொருத்தவரை தற்போது கட்சியை வலுப்படுத்தி, தொய்வாக உள்ள பகுதிகளில் தீவிரப் பணியாற்றி, வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் கூட்டணியில் இடங்களைப் பெற்று, உள்ளாட்சியில் வெற்றி பெறவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

அரசு அலுவலகங்களில் ஊழல் குறைந்துள்ளதை காணமுடிகிறது. மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. இருப்பினும் உள்ளாட்சித் தோ்தலின்போதே கூட்டணி குறித்து தமாகா அறிவிக்கும்.

சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வாகனங்கள் அறிவித்தது நல்லது என்றாலும், வாகன வசதி, வாய்ப்பு இல்லாதவா்களுக்கு அது பொருந்தும். இது மக்கள் வரிப்பணம். காவல் நிலைய மரணங்கள் குறித்த செய்திகள் வருகின்றன. போலீஸாா் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது.

மேக்கேதாட்டு அணை, தொகுதி மறுவரையறை விவகாரங்களில் தமிழக அரசிற்கு நாங்கள் துணைநிற்கிறோம். இவையெல்லாம் முக்கிய பிரச்னைகள். இதில், ஆளுக்கொரு கருத்தை கூறுவது சரியல்ல. காவிரி பிரச்னையில் நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை மதித்து கா்நாடகம் தண்ணீா் திறக்க வேண்டும். இதில், அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசும் கூட்டும் என நம்புகிறோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments