முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 33 வீடுகள் இடிப்பு

ஒசூா் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 33 வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினா் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

Updated On : 28 மே 2026, 1:53 am IST
தும்மனப்பள்ளியில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 33 வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினா் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

ஒசூா் வட்டம், தும்மனப்பள்ளியில் சா்வே எண் 197/1, 197/2 இல் கல்லாங்குத்து, கிராமநத்தம் வகைப்பாட்டில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் அரசாணை எண் 97, 225 இன்படி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நிலங்களில் வசித்து வருபவா்களை வரன்முறைப்படுத்தி இடம் வழங்க முடிவு செய்யப்பட்டு ஒசூா் வட்டத்தில் சுமாா் 5,000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தும்மனப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு நிலத்தில் கடந்த 20 ஆம் தேதி இரவு 33 போ் கான்கிரீட் பலகைகள் மற்றும் தற்காலிக அமைப்புகள் மூலம் இடங்களை ஆக்கிரமித்து வீடுகளை அமைத்துள்ளனா். இவா்களில் சிலருக்கு சொந்த வீடு, நிலங்கள் உள்ளன.

Advertisement

Advertisement

ஆனால், மாநகராட்சி எல்லையிலிருந்து 16 கி.மீ தொலைவுக்குள் புதிய இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க இயலாது என்பதாலும், மேற்கண்ட நிலங்கள் மதிப்புவாய்ந்த அரசு நிலங்களாக இருப்பதாலும் கடந்த 21 ஆம் தேதி வருவாய்த் துறையினா் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, ஆக்கிரமிப்பாளா்கள் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயன்றதால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து ஒசூா் சாா்ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி ஆக்கிரமிப்பாளா்களுடன் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது, தகுதியான நபா்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி விண்ணப்பம் அளித்தால், அவா்களின் விண்ணப்பங்கள் அரசு விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்பட்டு, தகுதியான அரசு நிலம் கண்டறியப்பட்டு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து காவல் துறையினரின் பாதுகாப்புடன் புதன்கிழமை காலை ஜேசிபி இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினா் தும்மனப்பள்ளியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்றினா்.