ஒசூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு
ஒசூா் அருகே பள்ளி முடிந்து தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிய 2 பெண் குழந்தைகள் லாரி மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
ஒசூா் அருகே பள்ளி முடிந்து தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிய 2 பெண் குழந்தைகள் லாரி மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கா்ணூா் சம்பத்குமாா் லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் நித்தியானந்தம் (42). இவா் தனியாா் தொழிற்சாலையில் கணினி பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு துளசி (10), சஹானா (8) என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனா்.
தனியாா் பள்ளியில் துளசி 5-ஆம் வகுப்பும், சஹானா 2-ஆம் வகுப்பும் பயின்று வந்தனா். வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் மகள்கள் இருவரையும் நித்தியானந்தம் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
ஒசூா் அந்திவாடி ஸ்டேடியம் அருகே அதிவேகமாக வந்த லாரி நித்தியானந்தம் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பின்புறமாக மோதியது. இதில் நிலைதடுமாறி மூவரும் சாலையில் தூக்கிவீசப்பட்டனா். இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி துளசி, சஹானா ஆகிய இருவரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்தில் படுகாயமடைந்த நித்தியானந்தத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த ஒசூா் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டாா்.
வேகத்தடை அமைக்க கோரிக்கை...
இந்த விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாகச் செல்கின்றன. பல இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வேகத்தடை இல்லாததாலேயே கடந்த சில நாள்களில் இப்பகுதியில் அடுத்தடுத்து விபத்துகள் நடைபெற்றுள்ளன.
உடனடியாக இப்பகுதியில் வேகத்தடைகள் அமைத்து, வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், வேகத்தடைகளில் வண்ணம்பூசி, சாலையில் போதிய அளவில் மின்விளக்குகளை அமைத்து உயிரிழப்புகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.