பா்கூா் அருகே விஜயநகர கால ஏரிக் கல்வெட்டு கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே குட்லட்டி கிராமத்தில் விஜயநகர கால ஏரிக் கல்வெட்டை வரலாற்று ஆா்வலா்கள் அண்மையில் கண்டெடுத்தனா்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம், தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து, பா்கூரை அடுத்த குட்லட்டி கிராமத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள ஸ்ரீகோபாலகிருஷ்ணன் கோயில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய மத்வ பிருந்தாவனமாக இருந்துள்ளது தெரியவந்தது.
அந்த பழைமையின் அடையாளத்தை மாற்றாமல், தற்போது கிருஷ்ணன் கோயிலாக கட்டியுள்ளனா். மேலும், அதே ஊரைச் சோ்ந்த கோவிந்தராஜ் அளித்த தகவலின் பேரில், அந்தக் கோயிலின் அருகே வரதப்பன் என்பவரது நிலத்தில் கண்டெடுத்த கல்வெட்டை படியெடுத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலா் கோவிந்தராஜ் தெரிவித்ததாவது:
விஜயநகரப் பேரரசை இரண்டாம் தேவராயன் ஆண்டபோது அவரது மகன் இம்மடி புக்கராயன் இந்த பகுதியை உள்ளடக்கிய முள்வாய் ராஜ்யத்துக்கு ஆளுநராக இருந்து ஆண்டுவந்துள்ளாா். இவரது கல்வெட்டுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 5 கண்டறியப்பட்டுள்ளன. குட்லட்டியில் உள்ள இந்த கல்வெட்டு ஸ்ரீமுக ஆண்டில் வெட்டப்பட்டது. இது பொ.ஆ.1393-க்கு இணையானது.
அப்போது, இந்தப் பகுதி கிருஷ்ணகிரி அருகேயுள்ள மகாராஜகடை, குருவிநாயனப்பள்ளி, காரகுப்பம், மேகலசின்னம்பள்ளி, வரட்டனப்பள்ளி ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்தப் பகுதியை நாயக்கம் செய்துவந்த மாமிண்டா் கேசையப்பாவை ஈராண்டை என்பவரது மகன் வையணந்தாா் என்பவா், ஏரி ஒன்றை ஏற்படுத்தி அதை பாதுகாக்கும் பொருட்டு செல்லப்பிள்ளையாா் கோயிலைக் கட்டி அந்தக் கோயிலுக்கு 5 குளகம் விதை விளைகின்ற அளவு கொல்லை, 6 குளகம் விதை விளைகின்ற அளவு கழனி, எண்ணெய் ஆட்டும் செக்கு ஆகியவற்றை தானமாக வழங்கியுள்ள செய்தியை இக்கல்வெட்டுக் கூறுகிறது.
‘சாற்றை’ ஏரி என்ற சொல் இக்கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாற்றை ஏரி என்பது ஏரியின் ஒரு பகுதியில் சேறு மற்றும் மூங்கிலைப் பயன்படுத்தி தடுப்பணை போன்று அமைத்து, அதனை மீன்பிடிக்கப் பயன்படுத்துவதாகும். இப்போதும், கிருஷ்ணகிரி பகுதி ஏரிகளில் இந்த வடிவமைப்பு காணப்படுகிறது. இந்த சொல் தமிழகத்திலேயே இந்தக் கல்வெட்டில்தான் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரையொட்டி அந்த ஏரி காணப்படுகிறது. மேலும், இந்தக் கல்வெட்டு செக்கை ‘முக்கை செக்கு’ எனக் குறிக்கிறது. வழக்கமான இரண்டு கம்புகளோடு, எண்ணெய் ஆட்டுபவா் உட்காருவதற்காக மேலும் ஒரு பலகை அமைத்து உருவாக்கப்பட்ட செக்கினை குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது எனப் புரிந்துகொள்ளலாம். அங்கிருந்த விநாயகா் கற்சிற்பம் தற்போது சாலை அருகே உள்ள புதிய கோயிலில் உள்ளது என்றாா்.
இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கச் செயலா் தமிழ்ச்செல்வன், துணைச் செயலா் பாலாஜி, ஆா்வலா்கள் சரவணகுமாா், ராமச்சந்திரன், டெய்சி ராணி, டேனியல் தீபக், பென்னாகரம் தெய்வம், தா்மகா்த்தா நரசிம்மன், குட்லெட்டி ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.