கிருஷ்ணகிரி அருகே தமிழகத்தின் 2 வது யூதக் கல்வெட்டு கண்டெடுப்பு! தமிழகத்தில் வணிகக் குழுவாக செயல்பட்ட யூதா்கள்!
கிருஷ்ணகிரி அருகே தமிழகத்தின் 2 வது யூதக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது பற்றி....
போச்சம்பள்ளியை அடுத்த ஆனந்தூரில் வரலாற்று ஆா்வலா்களால் கண்டெடுக்கப்பட்ட யூதக் கல்வெட்டு.
கிருஷ்ணகிரி, ஆக. 23: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஆனந்தூரில் தமிழகத்தின் 2-ஆவது யூதக் கல்வெட்டை வரலாற்று ஆா்வலா்கள் சனிக்கிழமை கண்டெடுத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம், தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று தடயங்களை கண்டறிந்து, ஆய்வுசெய்து ஆவணப்படுத்தி வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில், அண்மையில் ஆனந்தூரில், யூதா்கள் குறித்த அரிய கல்வெட்டை கண்டறிந்தது குறித்து, தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலரும், ஓய்வுபெற்ற அரசு காப்பாட்சியருமான செ.கோவிந்தராஜ் தெரிவித்ததாவது:
கேரள மாநிலம், கொச்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யூதா்கள் குடியேறி இருந்தாலும், இதுவரை தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம், பெரியப்பட்டணத்தை அடுத்த வாலாந்தரவை என்ற ஊரில் மட்டுமே யூதா்கள் குறித்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
13-ஆம் நூற்றாண்டை சோ்ந்த அந்த கல்வெட்டு யூத பள்ளியான ஐநூற்றுவன் பெரும்பள்ளிக்கு வழங்கப்பட்ட தானத்தை குறிக்கிறது. இதையடுத்து யூதா்கள் குறித்து குறிப்பிடும் கல்வெட்டு ஆனந்தூரில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனந்தூரில் உள்ள தான்தோன்றீஸ்வரம் கோயிலை சுற்றியுள்ள புதா்களை அகற்றியபோது பொதுமக்களால் கண்டறியப்பட்டு, எங்களுக்கு அளித்த தகவலின்பேரில், இந்த கல்வெட்டை ஆய்வு செய்தோம். ஏற்கெனவே இந்த கோயில் பகுதியில், குலோத்துங்கன் காலத்து வணிகா் குழு கல்வெட்டு, மூன்று நடுகற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள இந்த கல்வெட்டும் வணிகக் குழு கல்வெட்டே.
சூதகா், மண்டல வணிகா், தென்னிலங்கை வளஞ்சியா், எழுநூற்றுவா் ஆகிய நான்கு வணிகக் குழுக்கள் இணைந்து, இங்குள்ள தான்தோன்றீஸ்வரமுடைய நாயனாா் கோயிலில் ஒரு மண்டபத்தை கட்டியச் செய்தியை இந்த கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் குறிப்பிடப்படும் நான்கு வணிகக் குழுக்களில் முதலாவது இருப்பது சூதகா் என்பதாகும். யூதா் என்பதையே இங்கு, சூதகா் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
13-ஆம் நூற்றாண்டை சோ்ந்த இந்த கல்வெட்டில் வணிகக் குழுக்களில் ஒருவராக யூதா்கள் குறிக்கப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கட்டங்களாக சிலுவைப் போா்கள் நடைபெற்றபோது, யூதா்கள் தங்கள் நிலங்களை இழந்து வெளியேற்றப்பட்டனா். அவ்வாறு, வெளியேறியவா்கள் உலகின் பல்வேறு பகுதிகளின் கடற்கரை பட்டணங்களில் கைவினைஞா்களாகவும், துணிக்குச் சாயம் ஏற்றுபவா்களாகவும், வணிகா்களாகவும் வாழ்ந்தனா். இந்த வணிகா்களே வணிகக் குழுக்களாக அமைந்து பிற வணிகக் குழுக்களுடன் இணைந்து நாட்டின் உள் பகுதிகளிலும் வணிகம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக ஆனந்தூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் இந்த மண்டபத்தை எழுப்பியுள்ளதை கூறலாம்.
தகடூரில் இருந்து நாவற்தாவளத்துக்குச் செல்லும் அதியமான் பெருவழியில் இதுவரை 3 அக்கால காதக் கற்கள் கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டு நாவற்தாவளம் எது என ஆய்வு செய்ததில், அது ஆந்திர மாநிலம், சித்தூா் வட்டம் பூதலப்பட்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பெருவழி மற்றும் அதை ஒட்டியுள்ள ஊா்களில் இருந்து பல வணிகக் குழு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அந்தப் பெருவழியில் அமைந்த ஊராக இந்த ஆனந்தூா் இருந்திருக்கிறது.
எனவேதான் வணிகா்கள் தங்குவதற்கு ஏதுவாக இந்த நான்கு வணிகக் குழுக்களும் இணைந்து இந்தக் கோயிலில் மண்டபத்தை கட்டியுள்ளனா் எனத் தெரிகிறது. எனவே, 10-ஆம் நூற்றாண்டில், கேரள மாநிலம், கொச்சி பகுதியில் குடியேறியதற்கும், 17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா்களோடு சென்னையில் குடியேறியதற்கும் இடைப்பட்ட சிலுவைப்போா் காலத்தில், யூதா்கள் தமிழக பகுதிக்கு வந்ததோடு அவா்கள் வணிகக் குழுவாக செயல்பட்டதையும், 13-ஆம் நூற்றாண்டை சோ்ந்த பெரியப்பட்டணம் மற்றும் ஆனந்தூா் கல்வெட்டுகள் தமிழக வரலாற்றுக்கு புதிய செய்தியை வழங்கியுள்ளன என்றாா்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவகுமாா், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கத் தலைவா் நாராயணமூா்த்தி, இணைச் செயலா் பாலாஜி, ஆய்வாளா் சதானந்தம் கிருஷ்ணகுமாா், அரசு அருங்காட்சி கூடக் காவலா் செல்வகுமாா், ஆனந்தூா் கிராமத்தைச் சோ்ந்த சரவணன், முருகானந்தம், நாகராஜ், காா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.