FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

கபிலர் குன்று: நட்பின் சின்னம்!

வரலாறு என்பது கடந்த காலத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல், அது நிகழ்காலச் சமுதாயத்துக்குப் பண்பாட்டையும் அறத்தையும் உணர்த்தும் காலகண்ணாடியாகும்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:03 am IST
பகிர்:

வரலாறு என்பது கடந்த காலத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல், அது நிகழ்காலச் சமுதாயத்துக்குப் பண்பாட்டையும் அறத்தையும் உணர்த்தும் காலகண்ணாடியாகும். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்றுக்கு நடுவே அமைந்துள்ள கபிலர் குன்று', சங்ககால வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது.

மூவேந்தர்களை எதிர்த்து நின்ற குறுநில மன்னனுக்கும், தமிழ்ப் புலவருக்கும் இடையிலான உன்னத உறவையும், அதையொட்டி நிகழ்ந்த வரலாற்றுத் திருப்பங்களையும் இந்த இடம் கொண்டுள்ளது. தமிழ்ப் புலவர் கபிலருக்கும், பறம்பு மலைத் தலைவனும் கடையெழு வள்ளல்களில் ஒருவருமான வேள்பாரிக்கும் இடையிலான பிரிக்க முடியாத நட்பானது இலக்கியங்களில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரியின் மறைவுக்குப் பின்னர், நாடிழந்து நின்ற அவனது மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோரின் துயர நிலையை அவர்களே பாடிய புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடல் (புறம் 112) நம் கண்முன் நிறுத்துகிறது.

Advertisement

Advertisement

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில், எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்...

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!'

இந்தப் பாடல் மனித வாழ்வியலை உணர்த்துகிறது. இயற்கை மாறவில்லை, வானில் நிலவு மாறவில்லை; ஆனால் மனிதர்களின் வாழ்வில் எத்தனை பெரிய மாற்றம்! முந்தைய நிலவு பாதுகாப்பையும், மகிழ்ச்சியையும் தந்தது. அதே நிலவு, இன்று ஆதரவற்ற தன்மையையும் இழப்பின் வலியையும் நினைவூட்டுகிறது' என்பதை வெறும் ஐந்து வரிகளில் மிக நேர்த்தியாகப் பதிவு செய்தனர் பாரி மகளிர்.

தந்தையை இழந்து அநாதையாக நின்ற அந்தப் பெண்களின் முழுப் பொறுப்பையும் கபிலர் தன் சொந்தக் கடமையாக ஏற்றார். ஒரு தந்தையின் நிலையில் நின்று, அவர்களுக்குத் தகுந்த நல்வாழ்வு அமைத்துத் தருவதற்காக அவர் மேற்கொண்ட நெடும்பயணமும் முயற்சிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

பாரி மகளிருக்கு மணம் முடிப்பதற்காக கபிலர், விச்சிக்கோ, இருங்கோவேள் போன்ற பல குறுநில மன்னர்களை நேரில் சென்று அணுகியதைப் புறநானூற்றுப் பாடல்கள் (புறம் 201, 202) தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இருப்பினும், அதிகாரப் பலம் பொருந்திய மூவேந்தர்களின் பகைக்கு அஞ்சி அவர்கள் திருமணத்துக்கு முன்வரவில்லை.

இறுதியாக, அடைக்கலம் தேடி மலையமான் நாடு' என்று அழைக்கப்பட்ட மலாடு பகுதிக்கு கபிலர் வந்தடைந்தார். இதன் அன்றைய தலைநகரமே இன்றைய திருக்கோவிலூர்.

இந்தப் பகுதியைத் தொல்காப்பியர் காலத்திலிருந்தே மலையமான் மரபினர் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர். இங்கு இருவரையும் பாதுகாப்பாக அழைத்து வந்த கபிலர், அவர்களைத் திருக்கோவலூரை ஆண்ட மலையமான் மரபினரான தெய்வீகன்' என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். இந்த மலையமான் மரபினரின் சிறப்பைத் திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில், பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவலூர்' என்று போற்றுகிறார்.

கடமையை முடித்த கபிலர், நண்பனைப் பிரிந்து வாழ முடியாமல் பெருந்துயருற்றார். தாமும் உயிர்விடத் துணிந்து, மறுபிறவியிலாவது உன்னோடு பிரியாமல் வாழும் வரத்தை விதி அருளட்டும்' என உருகிப் பாடுகிறார்:

...இனையை ஆதலின் நினக்கு மற்று யான்

மேயினேன் அன்மையானே; ஆயினும்,

இம்மை போலக் காட்டி, உம்மை

இடை இல் காட்சி நின்னோடு

உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!'

(புறநானூறு - 236)

பண்டைய சமூகத்தில் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு அடைதல் வடக்கிருத்தல்' எனப் போற்றப்பட்டது. கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் போன்ற பல சான்றோர்களும் வடக்கிருந்ததாக வரலாறு தெளிவாகப் பதிவு செய்துள்ளது. இவ்வாறு வடக்கிருக்கும் சான்றோர்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக, நீர்நிலைகளின் நடுவே அமைந்த அமைதியான மணல் திட்டுகள் அல்லது தனித்த பாறைகளைத் தேர்ந்தெடுப்பது சங்க கால மரபாக இருந்துள்ளது.

மனதை ஒருமுகப்படுத்தவும், உலகியல் தொடர்புகளை முழுமையாகத் துண்டிக்கவும் இத்தகைய இடங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த மரபின் அடிப்படையிலேயே கபிலரும் தென்பெண்ணை ஆற்றுக்கு நடுவே அமைந்திருந்த பாறையைத் தேர்ந்தெடுத்து, அதில் உயிர் நீத்தார். இந்த நெகிழ்ச்சியான வரலாற்று உண்மையை, 1012-ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் ராஜராஜ சோழனின் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயில் கல்வெட்டும் மெய்ப்பிக்கிறது:

வன்கரை பொருது வருபுனல் பெண்ணை

தென்கரை உள்ளது தீர்த்தத் துறையது

மொய்வைத்து இயலும் முத்தமிழ் நான்மைத்

தெய்வக் கவிதை செஞ்சொற் கபிலன்

மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலம்

பெண்ணை மலையற்கு உதவி.....'

இலக்கியங்களும் கல்வெட்டுகளும் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள இந்தத் தகவல்களை வரலாற்று ஆய்வாளர்கள் ஒருங்கிணைத்தே பார்க்கின்றனர். 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சங்ககால நிகழ்வைத் துல்லியமாகப் பதிவு செய்திருப்பது இதன் வரலாற்று உண்மையைக் காட்டுகிறது.

கபிலர் தன் இன்னுயிரை நீத்த அந்த இடமே தற்போது கபிலர் குன்று' என அழைக்கப்படுகிறது. தொல்லியல் தரவுகளின்படி, 14-ஆம் நூற்றாண்டில் இந்தப் பாறையின் மீது செங்கல்லாலான சிறிய பள்ளிப்படை' (நினைவாலயம்) கட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உள்ளே சிவலிங்கமும், மேற்புறத்தில் கபிலர், மலையமான், அங்கவை, சங்கவை ஆகியோரைக் குறிக்கும் சிற்பங்களும் இன்றும் காணப்படுகின்றன. தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை 1985-ஆம் ஆண்டு முதல் இதனைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்தது.

கபிலர் விழா

திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் கபிலர் விழா நடத்தி வருகிறது. நிறுவனர் டி.எஸ். தியாகராஜன் இந்த விழாவை தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் கபிலர் வடக்கிருந்து உயிர்நீத்த குன்றில் வழிபாடு நடத்தி தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து இலக்கியப் பட்டிமன்றம், கபிலர் விருது வழங்கல் என மூன்று நாள்கள் நிகழ்ச்சி நடக்கிறது.

49 -ஆவது ஆண்டு விழா கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மேனாள் தலைவர் அரங்க ராமலிங்கம் நிகழாண்டின் கபிலவாணர் விருது பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments