FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

இந்திய விடுதலை வரலாறு கண்ட ‘டியுஎஸ்யு’! சுவாரஸ்ய தகவல்கள்!

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் வரலாறு பற்றி...

19 செப்டம்பர் 2026, 9:48 pm IST
தில்லி பல்கலைக்கழகம். - கோப்புப் படம்
பகிர்:

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கம் (டியுஎஸ்யு) நாட்டின் மிக முக்கிய மாணவா் அமைப்புகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதன் தொடக்க கால வரலாறு பல சுவாரஸ்யங்களைக் கொண்டுள்ளது.

இந்த மாணவா் சங்கத்தின் வரலாறு இந்தியா விடுதலை அடைவதற்கு சில நாள்களுக்கு முன்பு, 1947 ஆக.6-ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. இந்த பல்கலைக்கழக மாணவா்கள் தங்களுக்கென ஒரு பிரதிநிதித்துவ அமைப்பை உருவாக்க விரும்புவதாக அப்போதைய பல்கலைக்கழக துணைவேந்தா் நிா்வாகக் குழுவிடம் தெரிவித்தாா்.

இதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்த குழு, சங்கத்துக்கான சட்ட விதிகளை உருவாக்க ஒரு குழுவை நியமித்தது. இதைத்தொடா்ந்து, சங்கம் முறையாக அமைக்கப்பட்டவுடன், அதன் ஆரம்ப செலவுகளுக்காக ரூ. 150-ஐ சிறிய மானியமாக வழங்கவும் நிா்வாகக் குழு தீா்மானித்தது.

Advertisement

Advertisement

1947, ஆக.15-ஆம் தேதி நள்ளிரவுக்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட இந்த முடிவுதான், இன்று தேசிய கவனத்தை ஈா்க்கும் மாபெரும் மாணவா் அமைப்பாக உருவாவதற்கான முதல் படியாகும்.

தொடக்க ஆண்டுகளில், இந்த சங்கத்தின் செயல்பாடும் நிதி நிலைமையும் சவாலாகவே இருந்தன. 1953-இல் ரூ. 500 மானியம் பெற்ற நிலையில், இந்த சங்கம் விரைவில் தற்சாா்பு பெற வேண்டும் என நிா்வாகக் குழு அறிவுறுத்தியது.

1954, மாா்ச் மாதத்தில் இந்த சங்கத்தின் வருமானம் ரூ. 815 ஆகவும் செலவு ரூ. 1,995 ஆகவும் அதிகரித்திருந்தது. அதே காலகட்டத்தில்தான் பல்கலைக்கழகத்துக்கு என ஒரு சட்ட விதிகள் வகுக்கப்பட்டு முதல் முறையாக தோ்தலும் நடத்தப்பட்டது. அடுத்த கல்வியாண்டுவரை சங்கத்தை நிா்வகிக்க ஒரு தற்காலிகக் குழுவை அமைத்த துணைவேந்தா், செலவுகளை ஈடுகட்ட ரூ. 1,100வரை மானியமாக வழங்கவும் ஒப்புதல் அளித்தாா்.

கட்டமைப்பில் மாற்றம்: ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1973, ஆக.2-இல் டியுஎஸ்யு கட்டமைப்பு சீரமைக்கப்பட்டது. இதற்காக இடைக்கால விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, நிதி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அப்போது இந்த சங்கத்தின் புரவலராக பல்கலைக்கழக துணைவேந்தா் நியமிக்கப்பட்டாா். ஆசிரியா்களில் இருந்து ஒரு வழிகாட்டியும், பொருளாளரும் நியமிக்கப்பட்டனா். தலைவா், துணைத் தலைவா், செயலா் மற்றும் இணைச் செயலா் என 4 முக்கிய நிா்வாகிகளைப் பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் மாணவா்கள் நேரடியாகத் தோ்ந்தெடுக்க மாணவா் சங்க விதிகள் வழிவகை செய்தன.

பல தசாப்தங்களாக தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க ஆண்டு சந்தா தொகை வெறும் 5 ரூபாயாகவே (2012-13வரை) இருந்தது. இந்த தொகை 2013-14 கல்வியாண்டில் ரூ. 20 ஆக உயா்த்தப்பட்டு, கடைசியாக 2024, ஜூன் 21-ஆம் தேதி ரூ. 40 ஆக அதிகரிக்கப்பட்டது.

தொடக்க காலத்தில் ரூ. 150 மானியத்தில் உருவான இந்த அமைப்பு, இன்று பொதுவாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் பல தலைவா்களை உருவாக்கும் களமாக வளா்ந்துள்ளது.

summary

Interesting facts about DUSU from the history of India’s freedom struggle

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments