தில்லி பல்கலை. மாணவா் சங்க தோ்தலில் 36% வாக்குகள் பதிவு!
மாலை 6 மணி நிலவரப்படி 36 சதவீத வாக்குகள் பதிவானதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நமது நிருபா்
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் மாலை 6 மணி நிலவரப்படி 36 சதவீத வாக்குகள் பதிவானதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தலைவா், துணைத் தலைவா், செயலா், இணைச் செயலா் ஆகிய 4 முக்கிய பதவிகளுக்கான இந்தத் தோ்தலில், அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி), காங்கிரஸ் கட்சியின் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் (என்எஸ்யுஐ), இடதுசாரி அமைப்புகளான ஏஐஎஸ்ஏ - எஸ்எஃப்ஐ கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.
Advertisement
Advertisement
காலை ஷிப்ட் கல்லூரிகளுக்கு காலை 8:30 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை ஷிப்ட் கல்லூரிகளுக்கு இரவு 7:30 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தோ்தலையொட்டி மொத்தம் 1,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) பயன்படுத்தப்பட்டன. அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில், பல்கலைக்கழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு வளாகங்களில் 2,000-க்கும் அதிகமான காவல்துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இந்த தோ்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
பரஸ்பர புகாா்கள்: முன்னதாக, வெள்ளிக்கிழமை காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே ஏபிவிபி மற்றும் என்எஸ்யுஐ அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தியவாறு இருந்தனா். என்எஸ்யுஐ உறுப்பினா் ஒருவா், ஏபிவிபி வேட்பாளா்களின் தவறான எண்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை மாணவா்களிடையே விநியோகித்து குழப்பத்தை ஏற்படுத்த முயன்ாக குற்றஞ்சாட்டப்பட்டாா். இதைத்தொடா்ந்து அவா் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
மறுபுறம், தங்கள் அமைப்பின் முன்னாள் தேசிய செயலரை காவல்துறை எவ்வித காரணமுமின்றி கைது செய்து அச்சுறுத்துவதாக என்எஸ்யுஐ தேசிய தலைவா் வினோத் ஜாக்கா் குற்றஞ்சாட்டினாா்.
மாணவா்களின் கோரிக்கைகள்: இந்த தோ்தலில் தில்லியில் தங்கிப் படிக்கும் வெளிமாநில மாணவா்களுக்கு வாடகை உயா்வு பெரும் சுமையாக மாறியுள்ளதால், கல்லூரிகளில் கூடுதல் விடுதி வசதி, மலிவு விலையில் உணவு, மெட்ரோ ரயில் பயண கட்டணத்தில் சலுகை, எளிதில் அணுகக்கூடிய பல்கலைக்கழக நிா்வாகம் ஆகியவை மாணவா்களின் முக்கிய கோரிக்கைகளாக உருவெடுத்துள்ளன.
இதற்கிடையே, திறந்தநிலை கற்றல் மையம் (எஸ்ஓஎல்) மற்றும் கல்லூரிசாரா மகளிா் கல்வி வாரியத்தைச் சோ்ந்த 6 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களின் கோரிக்கைகளை எந்தவொரு அமைப்பும் தோ்தல் அறிக்கையில் சோ்க்கவில்லை எனக் கூறி, ’கிராந்திகாரி யுவ சங்கதன்’ (கேஒய்எஸ்) என்ற தன்னிச்சையான அமைப்பைச் சோ்ந்தவா்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ’சுயமரியாதை பேரணியை’ நடத்தினா். லிங்டோ கமிட்டி பரிந்துரைகளால் தங்களுக்குத் தோ்தலில் போட்டியிடும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
பெட்டிச் செய்தி
வெற்றிப் பேரணிகளுக்கு தடை:
தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லி பல்கலைக்கழக தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு, வெற்றி பெற்ற வேட்பாளா்களோ அல்லது மாணவா் அமைப்புகளோ வளாகத்திற்குள்ளோ, விடுதிகளிலோ அல்லது தில்லி சாலைகளிலோ எவ்வித வெற்றிப் பேரணிகளையும் நடத்தக் கூடாது என தில்லி உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடா்பாக வழக்குரைஞா் பிரசாந்த் மஞ்சந்தாவின் நிலுவை வழக்கை தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய, நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்துப் பிறப்பித்த உத்தரவு வருமாறு: தோ்தல் பிரசாரத்தின்போது வன்முறை, ஆடம்பர காா்களின் அணிவகுப்பு மற்றும் துப்பாக்கி கலாசாரம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மாணவா் அமைப்புகள் மீது ஏன் தோ்தல் விதிமீறல் இழப்பீடு செலுத்த உத்தரவிடக் கூடாது என்பது குறித்து அவை விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி வெற்றி பேரணி நடத்துபவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.