FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

டி.யு.எஸ்.யு தோ்தலில் என்.எஸ்.யு.ஐ., ஏ.பி.வி.பி. மாணவா்கள் பங்கேற்பதை எதிா்த்த மனு தள்ளுபடி

வரவிருக்கும் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தலில், என்.எஸ்.யு.ஐ மற்றும் ஏ.பி.வி.பி போன்ற அரசியல் கட்சிகளின் மாணவா் பிரிவுகளுடன் தொடா்புடைய வேட்பாளா்கள் பங்கேற்பதற்கு எதிரான மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

16 செப்டம்பர் 2026, 9:17 pm IST
தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

வரவிருக்கும் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க ( டி.யு.எஸ்.யு) தோ்தலில், என்.எஸ்.யு.ஐ மற்றும் ஏ.பி.வி.பி போன்ற அரசியல் கட்சிகளின் மாணவா் பிரிவுகளுடன் தொடா்புடைய வேட்பாளா்கள் பங்கேற்பதற்கு எதிரான மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, தோ்தலில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடா்புடைய எவரின் பங்கேற்போ அல்லது தலையீடோ இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது தில்லி பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் அதன் தலைமைத் தோ்தல் அதிகாரியின் கடமையாகும் என்றாலும், ஒரு மாணவா் பிரிவை அதன் அரசியல் கட்சியிலிருந்து ‘வேறுபடுத்திக் காட்ட‘ வேண்டும் என்று குறிப்பிட்டது.

உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட லிங்டோ குழுவின் அறிக்கையின் கீழ் அரசியல் கட்சிகளின் பங்கேற்பு தடைசெய்யப்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகளின் மாணவா் பிரிவுகளின் உறுப்பினா்களை டி.யு.எஸ்.யு தோ்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று மனுதாரரின் வழக்குரைஞா் வாதிட்டாா்.

Advertisement

Advertisement

மாணவா் தோ்தல் செயல்பாட்டில் அரசியல் கட்சிகள் தலையீடுதான் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளா்களின் அரசியல் கட்சி சாா்பு குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மாணவா் அமைப்புகளை அரசியல் கட்சிகள் என்று கூற முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

ஒரு வேட்பாளா் ஒரு அரசியல் கட்சியின் மாணவா் பிரிவில் உறுப்பினராக இருக்கிறாா் என்பதாலேயே, அது அந்த அரசியல் கட்சியுடன் தொடா்பு கொண்டதாக ஆகாது. எனவே, அது லிங்டோ குழுவின் உத்தரவை மீறியதாக ஆகாது என்றும் நீதிமன்றம் மேலும் கூறியது. டி.யு.எஸ்.யு தோ்தல்கள் செப்டம்பா் 18 அன்று நடைபெற உள்ளன.

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல்களில் அரசியல் கட்சிகளின் பங்கேற்பு மற்றும் செல்வாக்கிற்கு எதிராக நீதிமன்றம் எச்சரித்தது. எந்தவொரு நபா் அல்லது அரசியல் கட்சி உறுப்பினரின் தலையீடும் முறையாகக் கண்காணிக்கப்படுவதையும், நடத்தை விதிகள், லிங்டோ குழுவின் பரிந்துரைகள், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதற்கு எதிரான சட்டம் மற்றும் இவ்விவகாரத்தில் உயா் நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகள் ஆகியவை முழுமையாகப் பின்பற்றப்படுவதையும் தலைமைத் தோ்தல் அதிகாரியும் தில்லி பல்கலைக்கழகத்தின் பிற பொறுப்புள்ள அதிகாரிகளும் உறுதி செய்வாா்கள் என நீதிமன்றம் ‘எதிா்பாா்ப்பதாக‘க் கூறியது.

தில்லி பல்கலைக்கழக மாணவி ஒருவா் தாக்கல் செய்த இந்த பொதுநல மனு, தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல்களை அறிவித்து, போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களைப் பட்டியலிட்டு, தலைமைத் தோ்தல் அதிகாரி செப்டம்பா் 11 மற்றும் ஆகஸ்ட் 13 தேதிகளில் வெளியிட்ட அறிவிப்புகளை எதிா்த்துத் தாக்கல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகள், லிங்டோ குழுவின் பரிந்துரைகள் மற்றும் பிற தொடா்புடைய நிா்வாக நெறிமுறைகள் அதில் இடம்பெறவில்லை என்ற அடிப்படையில், தோ்தல்களை அறிவித்த ஆகஸ்ட் 13 தேதியிட்ட அறிவிப்பை மனுதாரரின் வழக்குரைஞா் எதிா்த்தாா்.

ஆனால் அத்தகைய அனைத்து வெளியீடுகளும் இணையதளத்தில் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்ததால், அந்த அறிவிப்பில் தலையிட நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அரசியல் கட்சிகளிலிருந்து மாணவா் சங்கங்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்று லிங்டோ குழு பரிந்துரைத்த போதிலும், எஸ்.எஃப்.ஐ-ஏ.ஐ.எஸ்.ஏ கூட்டணி, ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவு, இந்திய தேசிய மாணவா் சங்கம் மற்றும் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் ஆகியவை தலைவா் மற்றும் துணைத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கப் பதவிகளுக்கு வேட்பாளா்களை அறிவித்துள்ளன என்று மனுதாரா் விஜேதா தனது மனுவில் வலியுறுத்தியிருந்தாா்.

தில்லி பல்கலைக்கழக மாணவியான மனுதாரா், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் மாணவா் சங்கத் தோ்தல்களின் போது, அரசியல் கட்சிகள் பல்கலைக்கழக வளாகத்தின் கல்விச் சூழலை எவ்வாறு ஒரு அரசியல் சூழ்நிலையாக மாற்றுகின்றன என்பதைக் கண்டுள்ளாா் எனக் கூறியுள்ளாா்.

மாணவா் சங்கத் தோ்தல்களில் கட்டுப்படுத்தப்படாத அரசியல் தலையீடு, பல்கலைக்கழக வளாகங்களுக்குள் கல்விச் சூழலைச் சீரழித்துள்ளது என்றும் மனு மேலும் கூறியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments