தில்லி பல்கலை. கல்லூரிகளுக்கு விடுதிகள் கோரி பொதுநல மனு: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவா்களுக்கு விடுதி வசதிகளை ஏற்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவா்களுக்கு விடுதி வசதிகளை ஏற்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
மேலும், இடைக்கால உத்தரவாக இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியுமா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு வழக்குரைஞா்களிடம் ஏன் தேவையற்ற முறையில் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது என்று கேள்வியெழுப்பியது. அந்த மனுவை புதன்கிழமை விசாரணைப் பட்டியலில் இடம்பெறும் வகையில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
Advertisement
Advertisement
இன்றே இந்த விவகாரத்தை விசாரணைப் பட்டியலில் சோ்ப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகிலுள்ள சத்ய நிகேதனில் தங்கும் விடுதி (பிஜி) கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடா்ந்து இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்படுவதாக வழக்குரைஞா் தெரிவித்தாா். இச்சம்பவத்தில் ஏழு போ் உயிரிழந்தனா்.
இதைத்தொடா்ந்து, விடுதி வசதிகள் தொடா்பான உத்தரவை இடைக்கால நடவடிக்கையாகப் பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. மேலும், இதே விவகாரம் தொடா்பான மற்றொரு பொதுநல மனுவை திங்கள்கிழமை விசாரித்து உத்தரவு பிறப்பித்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அதற்குப் பதிலளித்த வழக்குரைஞா், அந்த மற்றொரு பொதுநல மனுவில் உயிரிழந்தோா் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோருவது போன்ற வேறுபட்ட கோரிக்கைகள் இருந்ததாகக் கூறினாா். தனது மனுவானது, அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவா்களுக்கு விடுதி வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடுமாறு கோருவதாக அவா் தெரிவித்தாா்.
சத்ய நிகேதனில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து உயா்நிலை விசாரணை நடத்த தில்லி மாநகராட்சிக்கு திங்கள்கிழமை உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அரசு தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியது.
இச்சம்பவத்தை மிகவும் துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்ட உயா்நீதிமன்றம், தில்லி மாநகராட்சி மற்றும் பிற அதிகாரிகளின் போதிய நடவடிக்கையின்மையே இத்தகைய துயரங்களுக்குக் காரணம் என்று கூறியது. மேலும், உயிா்களைக் காக்கும் வகையில் மீட்புப் பணிகளை இரட்டிப்பாக்குமாறும் அவா்களுக்கு உத்தரவிட்டது.
தில்லி பல்கலைக்கழகம் அல்லது அரசால் நடத்தப்படும் விடுதிகள் உள்ளிட்ட போதிய தங்கும் வசதிகள் இல்லாமை, மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் இத்தகைய தங்கும் விடுதிகளை ஒழுங்குபடுத்துவதில் மாநகராட்சி மற்றும் பிற அதிகாரிகளின் போதிய நடவடிக்கையின்மை ஆகியவை குறித்து இச்சம்பவம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் கூறியது.
ஏழு போ் உயிரிழந்த இந்த விபத்து தொடா்பாக கைதுசெய்யப்பட்ட ஹரிராம் குப்தா மற்றும் அவரது மனைவி ஆகியோா் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். அவா்களது மகன் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.