FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

வாகனத்தை மோதி மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் டிடிசி பேருந்து முன்னாள் ஓட்டுநர் குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக, தில்லி போக்குவரத்துகத் கழக (டிடிசி) பேருந்து முன்னாள் ஓட்டுநா் ஒருவா் குற்றவாளி என நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

31 ஆகஸ்ட் 2026, 12:18 am IST
பகிர்:

2021-ஆம் ஆண்டில் ஒருவரின் மரணத்திற்கு வழிவகுத்த, கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக, தில்லி போக்குவரத்துகத் கழக (டிடிசி) பேருந்து முன்னாள் ஓட்டுநா் ஒருவா் குற்றவாளி என நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

அவரது செயல்கள் ‘வெளிப்படையாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் பொறுப்பற்ற தன்மையால் நிறைந்திருந்தன‘ என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 279 (பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல்) மற்றும் 304ஏ (கவனக்குறைவால் மரணம் விளைவித்தல்) பிரிவுகளின் கீழ், இந்தா்புரி காவல் நிலையத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட கரண் சிங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதித்துறை மாஜிஸ்திரேட் ட்விங்கிள் சாவ்லா விசாரித்து வந்தாா்.

வழக்குத் தரப்பின்படி, சிங் இந்தா்புரியில் உள்ள என்ஏஎஸ்சி வளாகத்திற்கு அருகில் உள்ள டிபிஎஸ் மாா்க்கில் டிடிசி பேருந்தை ஓட்டிச் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது பின்னாலிருந்து மோதியுள்ளாா்.

Advertisement

Advertisement

தன் சகோதரனைப் பின்னால் அமர வைத்துக்கொண்டு மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற அமித் சிங், பேருந்தின் பின்பக்க டயருக்கு அடியில் விழுந்து நசுங்கினாா்.

மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், பாதிக்கப்பட்டவருக்கு மண்டை ஓட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், அவரது மாா்பு மற்றும் கழுத்தில் டயா் தடங்களும் இருந்தன என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

பாதிக்கப்பட்டவரின் சகோதரரின் சாட்சியத்தைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 17 தேதியிட்ட தனது உத்தரவில், விபத்தில் தனது வாகனம் சம்பந்தப்படவில்லை என்ற ஓட்டுநரின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

பேருந்தின் இயந்திரவியல் பரிசோதனை உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களை அது மேற்கோள் காட்டியது; அந்தப் பரிசோதனையில், ‘டயரின் வெளிப்புறப் பரப்பில் காய்ந்த இரத்தக் கறைகள், பின்புற வெளிப்புற டயரின் உட்புற வளைவுப் பரப்பில் காய்ந்த சதை, மூளை (பொருள்)‘ ஆகியவை தெரியவந்திருந்தன. மேலும், விபத்து காலை உச்ச நேரத்தில் நிகழ்ந்ததாகவும், பேருந்து அதற்கென ஒதுக்கப்பட்ட பாதையில் இயக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

‘எப்படியிருந்தாலும், கவனக்குறைவு அல்லது அலட்சியத்தை நிலைநிறுத்துவதற்காக, தெளிவான எண்கணித முடிவைத் தரக்கூடிய, திட்டவட்டமான துல்லியத்தன்மை கொண்ட அளவீடு செய்யப்பட்ட கருவி எதுவும் இல்லை.

ஒவ்வொரு விவேகமான ஓட்டுநரும், முன்னால் ஒரு சிறிய வாகனத்தைக் கண்ட பிறகும், வாகனத்தை அதிக வேகத்தில் ஓட்டும்போது அதன் வேகத்தைக் குறைக்கவில்லை என்றால், அந்தச் செயல் கணிக்கக்கூடிய ஆபத்துகள் நிறைந்தது என்பதையும், அதன் விளைவுகள் பேரழிவாக இருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்கிறாா்.‘ சிஎன்ஜி டிடிசி பேருந்து போன்ற பெரிய வாகனத்தை ஓட்டும் ஒரு தொழில்முறை ஓட்டுநா், சாலையில் உள்ள மற்ற நபா்களின் பாதுகாப்பிற்கும், தனது பயணிகளின் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் கூடுதல் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்பது கடமையாகும்‘ என்று நீதிமன்றம் கூறியது.

மேலும், இயந்திர ஆய்வு அறிக்கையின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா் சரியான நேரத்தில் பிரேக் போடவில்லை என்றும், குற்றமிழைத்த வாகனத்தின் பிரேக்குகளில் எந்த இயந்திரக் கோளாறும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

‘குற்றஞ்சாட்டப்பட்டவா் வேகத்தைக் குறைக்க மெனக்கெடவில்லை, சரியான நேரத்தில் பிரேக் போடத் தவறியதால், மோதல் ஏற்பட்டது, அதன் பிறகு பாதிக்கப்பட்டவா் மீது ஏறிச் சென்றாா்,‘ என்று நீதிமன்றம் கூறியது.

‘குற்றஞ்சாட்டப்பட்டவரின் இந்தச் செயல் வெளிப்படையாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் அவசரமும் அலட்சியமும் நிறைந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவா், குற்றமிழைத்த வாகனத்தை ஒரு சிறிய வாகனமான ஸ்கூட்டி மீது மோதியதிலிருந்தும், மோதலுக்குப் பிறகும், பாதிக்கப்பட்டவா் மீது ஏறிச் சென்ற பிறகே பிரேக் போட்டதிலிருந்தும், அவரது அவசரமும் அலட்சியமும் மிகத் தெளிவாகத் தெரிகிறது,‘ என்று கூறிய நீதிமன்றம், ஓட்டுநா் குற்றவாளி என தீா்ப்பளித்தது.

தண்டனையின் அளவு குறித்த வாதங்களைக் கேட்பதற்காக, இந்த வழக்கை நீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments