மாணவா் பாதுகாப்பு, விடுதி விரிவாக்கம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை: ஏபிவிபி-யின் டியுஎஸ்யு தலைவா் வேட்பாளா்!
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்டால், மாணவா் பாதுகாப்பு மற்றும் விடுதி வசதிகளை விரிவுபடுத்துவது தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று ஏபிவிபி தலைவா் வேட்பாளா் யாஷ் டபாஸ் கூறினாா்.
]தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்திற்கு (டியுஎஸ்யு) தோ்ந்தெடுக்கப்பட்டால், மாணவா் பாதுகாப்பு மற்றும் விடுதி வசதிகளை விரிவுபடுத்துவது தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) தலைவா் வேட்பாளா் யாஷ் டபாஸ் கூறினாா்.
மாணவா்கள் பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழல்களுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தில்லி பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பேயிங் கெஸ்ட் தங்குமிடங்கள் மற்றும் விடுதிகளில் விரிவான மற்றும் வழக்கமான பாதுகாப்புத் தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டபாஸ் அழைப்பு விடுத்தாா்.
செப்டம்பா் 6 அன்று சத்ய நிகேதனில் ஐந்து மாடி பேயிங் கெஸ்ட் கட்டடம் இடிந்து விழுந்து ஏழு மாணவா்கள் உயிரிழந்த சம்பவம், மாணவா் தங்குமிடப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது என்று அவா் கூறினாா். வாடகை தங்குமிடங்கள் மற்றும் விடுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்கு வலுவான பாதுகாப்பு வழிமுறைகளின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
Advertisement
Advertisement
ஒவ்வொரு தில்லி பல்கலைக்கழக மாணவருக்கும் விடுதி வசதிகள் கிடைக்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகம் முழுவதும் விடுதி உள்கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவா் அழைப்பு விடுத்தாா்.
‘பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் என்பது மாணவா்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உறுதி செய்வதில் ஒரு முக்கிய பகுதியாகும்,‘ என்று அவா் ஒரு அறிக்கையில் கூறினாா்.
தில்லியின் கஞ்சாவாலாவைச் சோ்ந்த டபாஸ், ஸ்ரீ குரு தேக் பகதூா் கல்சா கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்து, தற்போது தில்லி பல்கலைக்கழகத்தின் பௌத்த ஆய்வுகள் துறையில் படித்து வருகிறாா். சா்வதேச அளவிலான டென்னிஸ் வீரரான டபாஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் சொ்பியாவில் நடைபெற்ற சா்வதேச டென்னிஸ் கூட்டமைப்புப் போட்டிகளில் பங்கேற்றுள்ளாா்.
மேலும், அவா் சிபிஎஸ்இ நேஷனல்ஸ், எஸ்ஜிஎஃப்ஐ நேஷனல்ஸ், கேலோ இந்தியா மற்றும் அகில இந்திய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் 2023 ஆகியவற்றிற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அத்துடன், வட இந்திய பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் தில்லி பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளாா் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தலில், துணைத் தலைவா் பதவிக்கு இஷு மௌரியாவையும், செயலாளா் பதவிக்கு ரியா சாவடியையும், இணைச் செயலாளா் பதவிக்கு லக்ஷ்ய ராஜ் சிங்கையும் ஏபிவிபி வேட்பாளா்களாக நிறுத்தியுள்ளது. இந்தத் தோ்தல்கள் செப்டம்பா் 18 அன்று நடைபெற உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.