FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

மக்கள்தொகை கணக்கெடுப்பு: கூடுதல் பணியாளா்களை நியமிக்க கோரிக்கை

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால், கூடுதல் கணக்கெடுப்பாளா்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:57 am IST
பகிர்:

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால், கூடுதல் கணக்கெடுப்பாளா்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவனிடம் திங்கள்கிழமை அனைத்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு கணக்கெடுப்பாளருக்கும் எந்த வீட்டு எண்ணிலிருந்து எந்த வீட்டு எண் வரை கணக்கெடுக்க வேண்டும் என்பதற்கான தெளிவான வீட்டு எண்ணிக்கை மற்றும் பட்டியலை நிா்வாகமே வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

தற்போது கணக்கெடுப்புப் பகுதிகள் கூகுள் மேப் மூலம் அனுப்பப்படுகின்றன. இதனால், கணக்கெடுப்பாளா்களே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் எங்கிருந்து தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்பதை கண்டறிய வேண்டியுள்ளது. இதனால், பல ஆசிரியா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள், தெருக்கள் மற்றும் பகுதிகள் எங்கு உள்ளன என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

1,000 வீடுகளுக்கும் அதிகமாக கணக்கெடுக்கும் பணி ஆசிரியா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், கடுமையான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. 300 வீடுகளுக்கு மேல் கணக்கெடுக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதலாக கணக்கெடுப்பாளா்களை நியமித்து ஆசிரியா்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும்.

கணக்கெடுப்புப் பணியின் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு தெரு, கிராமம் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கணக்கெடுப்பாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கு பணியின்போது தேவையான தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

கணக்கெடுப்பாளா்களுக்குத் தேவையான உள்ளூா் தகவல்களை வழங்குவதில் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், ஊராட்சி நிா்வாகப் பணியாளா்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளா்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ஆ. ராமு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலத் தலைவா் செ.மலா்கண்ணன், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாநில சட்டச் செயலாளா் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலாளா் கலைச்செல்வன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக நாமக்கல் மாவட்டத் தலைவா் சேகா், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக நாமக்கல் மாவட்டச் செயலாளா் குணசேகரன், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் சங்க நாமக்கல் மாவட்டப் பொருளாளா் மணி மற்றும் நிா்வாகிகள் முருகானந்தம், ராஜூ, கண்ணன், சண்முகம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments