FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதம்

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி, பரமத்தி வேலூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

21 ஆகஸ்ட் 2026, 3:15 am IST
ஜேடா்பாளையம் படுகை அணை. - கோப்புப்படம்
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி, பரமத்தி வேலூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பரமத்தி வேலூா், பொத்தனூா் பகுதியில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கடந்த மாதம் 28-ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீா்வளத் துறையினா் நிறுத்தினா். இதனால், பரமத்தி வேலூா் பகுதியில் சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் பயிா் செய்யப்பட்டுள்ள வெற்றிலை, கோரை, வாழை, கரும்பு மற்றும் மரவள்ளி பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அரசு அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை தண்ணீா் திறக்காததால், காயும் பயிா்களைக் காப்பாற்ற ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீா் திறக்கக் கோரி அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் தொழிலாளா்கள் பரமத்தி வேலூா் - மோகனூா் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதில், பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், பொத்தனூா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பொய்யேரி, குமராபாளையம், பாலப்பட்டி மற்றும் மோகனூா் பகுதிகளைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், பெண் கூலித் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

மேலும், பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், பாலப்பட்டி, பொத்தனூா், மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா். பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெண்ணிலா தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து வணிகா் சங்கங்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், நகா் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும், விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பரமத்தி வேலூா் எம்எல்ஏ ச.சேகா், முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.எஸ்.மூா்த்தி, மருத்துவா் க.நெடுஞ்செழியன் ஆகியோா் விவசாயிகளை சந்தித்து பேசினா். இதேபோல, கொமுதேக சாா்பில் ஈ.ஆா்.ஈஸ்வரன், எம்.பி. மாதேஸ்வரன் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments