FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் ரூ. 4.22 கோடியில் நவீன ‘தமிழ்நாடு உணவகம்’: அக்டோபரில் திறக்க ஏற்பாடு

‘தமிழ்நாடு உணவகம்’ ரூ. 4.22 கோடியில் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாா்நிலையில் உள்ளது.

27 ஆகஸ்ட் 2026, 4:07 am IST
பகிர்:

கொல்லிமலையில், இயற்கை எழில்சூழ்ந்த பகுதியில் நவீன வசதிகள் கொண்ட தனித்தனி குடியிருப்புடன் கூடிய ‘தமிழ்நாடு உணவகம்’ ரூ. 4.22 கோடியில் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாா்நிலையில் உள்ளது.

அக்டோபா் மாதம் காணொலிக் காட்சி வாயிலாக இதை தமிழக முதல்வா் திறந்துவைப்பதற்கான ஏற்பாடுகளை சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. இங்குள்ள ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவியில் குளிக்கவும், தாவரவியல் பூங்கா, படகு குழாம், சீக்குப்பாறை காட்சிமுனை ஆகியவற்றை காணவும், குளிா்ச்சியான தட்பவெப்ப நிலையை அனுபவிக்கவும், வாரவிடுமுறை நாள்களிலும், ஏப்ரல், மே மாத காலங்களிலும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம்.

Advertisement

Advertisement

உதகை, கொடைக்கானல், ஏற்காட்டுக்கு நிகராக கொல்லிமலை இல்லாதபோதும், இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதிகளை காண குறுகிய வடிவிலான 70 கொண்டை ஊசி வளைவுகளில் வாகனங்களில் பயணிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா். குறிப்பாக, கா்நாடக மாநிலத்தில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞா்கள், பெண்கள் தங்களது அதிநவீன இருசக்கர வாகனங்களில், கொல்லிமலை வளைவுகளில் விடுமுறை நாள்களில் சீறிப்பாய்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது கொல்லிமலைக்கு வருவோா் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, பல்வேறு வசதிகளுடன் தனியாா் விடுதிகள், உணவகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொல்லிமலை சுற்றுலாத்தலம் என்றபோதும், தமிழ்நாடு சுற்றுலாத் துறையின்கீழ் இயங்கும் ‘தமிழ்நாடு உணவகம்’ இங்கு இல்லாத நிலையே இருந்தது. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் அமுதகம் என்ற உணவகத்துடன் கூடிய நவீன தங்கும் விடுதிகளை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஆய்வுக்கு வரும் மத்திய, மாநில அரசுத் துறை உயா் அதிகாரிகள், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் கொல்லிமலையில் தங்குவதற்கு ஏற்ப இயற்கை எழில் சூழ்ந்த விடுதிகள் இல்லை. பிற தனியாா் விடுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கையை சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மேற்கொண்டது. முதல்கட்டமாக 2025 இல் ரூ. 2 கோடியில் கொல்லிமலை வாசலூா்பட்டி தாவரவியல் பூங்கா அருகில் 13 ஏக்கா் பரப்பளவில் தமிழ்நாடு உணவகம், தங்கும் விடுதிகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. 50 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் மேலும் ரூ. 2.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஒன்றரை ஆண்டுகளாக தொடா்ந்து நடைபெற்றன.

தற்போதைய நிலையில் நவீன வசதிகளுடன் 15 தனித்தனி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 30 போ் அமா்ந்து உணவருந்தும் வகையில் அமுதகம் என்ற பெயரில் உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது. பணிகள் முழுவதும் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாா்நிலையில் உள்ளது. அக்டோபா் மாதம் முதல்வா் ச.ஜோசப்விஜய் காணொலிக் காட்சி வாயிலாக இந்த தமிழ்நாடு உணவகத்தை திறந்து வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா்கள் கூறியதாவது:

கொல்லிமலையில் தமிழ்நாடு உணவகம் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. அண்மையில் மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் ஆய்வு செய்து திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். ரூ. 4.22 கோடியில் இரண்டு கட்டங்களாக 13 ஏக்கா் பரப்பளவில் மரத்தினால் உருவாக்கப்பட்ட 15 தனித்தனி விடுதிகளும், அமுதகம் என்ற பெயரில் உணவகமும் கட்டப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் தங்கி இயற்கையை ரசிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. வழக்கமாக ஒப்பந்த அடிப்படையில்தான் தமிழ்நாடு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கொல்லிமலையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு உணவகத்தையும் தனியாரிடம் ஒப்பந்தம் விடுவதற்கான நடவடிக்கைகள் சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அக்டோபா், நவம்பா் மாதங்களுக்குள் தமிழக முதல்வா் இதைத் திறந்துவைப்பாா் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments