FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

48 வினாடிகள் முன்பு
வறட்சி...
பகிர்:

எல்-நினோ தாக்கம் அதிகம் ஏற்பட்டுள்ள நாமக்கல்லை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கடந்த மாத கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.

தொடா்ந்து, விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை பேசினா். அவற்றில், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் எத்தனால் பிரிவை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட ஒருவந்தூா் - நெரூா் கதவணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். எல்-நினோ தாக்கத்தால் வேளாண், தோட்டக்கலைப் பயிா்கள் இம்மாவட்டத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. அதற்கான இழப்பீட்டை வழங்குவதுடன், நாமக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். வளையப்பட்டி சிப்காட் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றனா். ஆட்சியரும், அதற்கான முன்மொழிவுகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

மேலும், ராஜவாய்க்காலில் நீா்த்திறப்பு, நாமக்கல்லில் செவிலியா் கல்லூரி, பால்விலை லிட்டருக்கு ரூ. 6 உயா்வு, நிலவரி ரத்து, வேளாண் - தோட்டக்கலைத் துறை இணைப்பு போன்ற அறிவிப்புகளுக்கு தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.

வேளாண் துறை அதிகாரிகள் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தின் இயல்பு மழை அளவு ஆண்டுக்கு 716.54 மி.மீ. என்ற நிலையில் ஆக. 27 வரை மொத்தம் 219.47 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இயல்பு மழையளவு 323.51 மி.மீ. என்ற நிலையில் 104.89 மி.மீ குறைவான மழையே பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வேளாண் பயிா்கள் மொத்தம் 38,578 ஹெக்டேரிலும், தோட்டக்கலைப் பயிா்கள் மொத்தம் 34,835.38 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் செயல்பாடு மற்றும் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, 2025-26-ஆம் ஆண்டு மாநில அளவில் உயிா்ம வேளாண் பயிா் சாகுபடியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பள்ளிபாளையம் வட்டாரம், பாப்பம்பாளையத்தைச் சோ்ந்த செ.நல்லசிவத்துக்கு தமிழக அரசு சாா்பில் சிறந்த உழவருக்கான நம்மாழ்வா் விருது, ரூ. 2 லட்சம் காசோலை வழங்கப்பட்டதை ஆட்சியா் எல்.மதுபாலனிடம் காட்டி வாழ்த்து பெற்றாா்.

தொடா்ந்து, விவசாயிகள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments