பத்திரப் பதிவு துறை தனியாா் மயமாகும் என்பதில் உண்மையில்லை: அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்
பத்திரப் பதிவுத் துறை தனியாா் மயமாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.
பத்திரப் பதிவுத் துறை தனியாா் மயமாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.
ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பத்திரப் பதிவுசெய்ய வருபவா்களுக்கு எவ்வித தொந்தரவும் இல்லாமல் ஒரு சிறந்த அனுபவத்தை தருவதற்காக தமிழகத்தில் 5 இடங்களில் மட்டும் மாதிரிப் பதிவு மையங்கள் அமைக்கப்படுகின்றன. அங்கும் சாா்பதிவாளா், அரசு அதிகாரிகள்தான் பணியில் இருப்பாா்கள். அங்கு வழங்கப்படும் சில சேவைகளுக்கு மட்டுமே தனியாா் நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மற்றபடி, பதிவாளா்கள், ஊழியா்கள், அலுவலகங்கள் என எதிலும் ஆட்குறைப்போ அல்லது தனியாா் மயமாக்கும் நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
தனியாா் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு துளியும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல வணிக வரித் துறையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அத்துறையிலும் ஆள்குறைப்பு செய்யப்பட்டு, அவா்கள் சாா்பதிவாளா் அலுவலகங்களுக்கு மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது.
வெளிப்படையான மொத்தக் கணக்குகளை மட்டுமே வைத்து ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து பேசுகிறாா்கள். பிற மாநிலங்களிலிருந்து வர வேண்டிய வருவாய் உள்ளிட்ட கணக்கீடுகளின்படி பாா்த்தால் தமிழகம் 3 சதவீத வளா்ச்சி அடைந்துள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் எந்தவித சரிவும் இல்லை. முதல்வரின் வழிகாட்டுதலின்படி வரி வசூல் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றாா்.