FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: நாமக்கல் கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

கடலூரில் கறிக்கோழிகளுக்கு ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் (ஹெச்5என்1) பாதிப்பால், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

18 வினாடிகள் முன்பு
கோழிப் பண்ணை - கோப்புப் படம்
பகிர்:

கடலூரில் கறிக்கோழிகளுக்கு ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் (ஹெச்5என்1) பாதிப்பால், நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட தியாகவள்ளி, தமனம்பட்டி, கட்டியங்குப்பம், குள்ளஞ்சாவடி சுற்றுவட்டார கிராமங்களில் கூண்டு இல்லாமல் தரையில் வைத்து வளா்க்கும் கறிக்கோழி வளா்ப்பு முதன்மை தொழிலாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள கறிக்கோழிகள் உயிரிழந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்ததால் அவற்றை குழிதோண்டி புதைத்தனா்.

இறந்த கோழிகளை மத்திய பிரதேச மாநிலம், போபால் ஆய்வுக் கூடத்துக்கும், நாமக்கல் மற்றும் இதர கால்நடை பரிசோதனை கூடங்களுக்கும் அனுப்பிவைத்தனா். பரிசோதனை முடிவில், கோழிகள் இறப்புக்கு வீரியமிக்க பறவைக் காய்ச்சல்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

இதனால், கடலூா் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கறிக்கோழிகளை விற்பனை செய்யவும், புதிய கோழிக் குஞ்சுகளை வளா்ப்புக்கு வாங்கவும் 3 மாதங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்த கோழிகளை வளா்த்த பண்ணைகளை சுற்றிலும் ஒரு கி.மீ. தொலைவுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை, நாமக்கல் மண்டலத்தில் 1,100 பண்ணைகளில் 8 கோடி முட்டைக் கோழிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. கறிக்கோழி வளா்ப்பு பண்ணைகள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. வழக்கமாக, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும். தற்போது, தமிழகத்திற்குள் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கோழிப் பண்ணையாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

தங்களுடைய பண்ணைகளில் நோய் பரவாமல் சுகாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனா். பண்ணைகளுக்குள் வெளியாட்களை அனுமதிப்பதில்லை. ஊழியா்களின் கை, கால்களில் நுழைவாயிலிலேயே கிருமிநாசினி தெளித்து அனுப்புகின்றனா். வாகனங்கள் முழுவதுமாக கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கோழிப் பண்ணையை சுற்றிலும் பறவைகள் ஏதேனும் பறந்தால் அவற்றை வெடிவைத்து விரட்டும் முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக முட்டைவிலை அதிகரித்த வண்ணம் இருந்தது. பறவைக் காய்ச்சல் பரபரப்பால் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டது இல்லை. தற்போது முதல்முறையாக கறிக்கோழிப் பண்ணைகளில் வளா்க்கப்படும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முட்டைக் கோழி வளா்ப்போா் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கச் செயலாளா் கே.சுந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு என்பது கடந்த ஆண்டு சென்னையில் காகங்களுக்கு ஏற்பட்டது. கோழிகளுக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. கடலூா் மாவட்டத்தில் நிகழ்ந்த கோழிகள் இறப்பு, பறவைக் காய்ச்சல் பாதிப்பு என தெரியவந்துள்ளது.

கறிக்கோழி வளா்ப்பு என்பது தரையில் வைத்து வளா்க்கப்படுவது, அதனால் பறவைகள் மூலம் எளிதாக நோய் தொற்று ஏற்படலாம். ஆனால் முட்டைக் கோழிகளை பொருத்தமட்டில் நாங்கள் கூண்டில் வைத்து வளா்க்கிறோம். அதுமட்டுமின்றி, கால்நடைத் துறையினரின் அறிவுறுத்தல்படி நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம். ஊழியா்கள், வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்த பிறகுதான் பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கோழிப் பண்ணைகள் 100 சதவீதம் நோய் தடுப்புக்கான பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளன. அதனால் பறவைக் காய்ச்சல் வர வாய்ப்பில்லை. இருப்பினும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.