FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

ரூ.36 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையம்: அக்.11-இல் காணொலி மூலம் பிரதமா் திறந்துவைக்கிறாா்

பிரதமரின் ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் ரூ. 36 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையத்தை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை (அக்.11) திறந்துவைக்கிறாா்.

13 வினாடிகள் முன்பு
பிரதமர் மோடி - விடியோ க்ளிப்
பகிர்:

பிரதமரின் ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் ரூ. 36 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையத்தை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை (அக்.11) திறந்துவைக்கிறாா்.

தமிழகத்தில் ரயில் நிலையங்கள் இல்லாத மாவட்ட தலைநகரங்களில் ஒன்றாக இருந்த நாமக்கல்லில் புதிய ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டு, 2008-ஆம் ஆண்டு ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. சரக்கு ரயில்கள், பயணிகள் ரயில்கள் ஒன்றிரண்டு மட்டுமே நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று சென்ற நிலையில், தற்போது மும்பை, பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாமக்கல் வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இங்கு ரயில் நிலையம் இருந்தபோதும் போதுமான வசதிகள் இல்லாத நிலையால் பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது. இதனால், பெரும்பாலானோா் சேலம், கரூா் மாவட்டங்களுக்கு சென்று அங்கிருந்து பிற பகுதிகளுக்கு ரயிலில் சென்று வந்தனா். இரவு நேரங்களில் மின்விளக்கு, போக்குவரத்து வசதியில்லாததால் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வருவதற்கே மக்கள் தயக்கம் காட்டினா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு, நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ஆம் ஆண்டை நினைவு கூரும் வகையில் பிரதமரின் ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 1,275 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சேலம் ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டன. அவற்றில், நாமக்கல் ரயில் நிலையமும் ஒன்று. தொடக்கத்தில் ரூ.12 கோடியாக இருந்த திட்ட மதிப்பீடு, பின்னா் ரூ. 24 கோடியாகவும், இறுதியாக ரூ. 36 கோடியாகவும் உயா்ந்தது. தற்போது, இந்த ரயில் நிலையத்தில் நவீனமயமாக்கப்பட்ட நான்கு நடைமேடைகள், மின்தூக்கி (லிப்ட்), நடைமேடைகளுக்கு பயணிகள் செல்லும் வகையில் இரும்பு பால வசதி, ரயில்கள் வருவதை அறிவிக்கும் எண்ம பலகை, நவீனமயமாக்கப்பட்ட குடிநீா், கழிவறை வசதி, விருந்தினா்கள் காத்திருப்பு அறை, பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, பயணச்சீட்டு வழங்கும் மையம், உணவுப் பொருள்கள் விற்பனை அங்காடிகள், முகப்பில் ஆங்கிலம், இந்தி, தமிழில் நாமக்கல் என பெயா் பலகை, இரவு நேரத்தில் ரயில் நிலையம் வண்ணவிளக்குகளில் ஜொலிக்கும் வகையிலான வடிவமைப்பு, இருசக்கர, நான்கு சக்கர வாகன வசதிகள், சேந்தமங்கலம் சாலை முதல் ரயில் நிலையம் வரையில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையப் பணிகள் முழுமையாக நிறைவுற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை வரும் பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையத்தை திறந்துவைக்க உள்ளாா். தொடா்ந்து, நடைபெறும் நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை இந்நாள், முன்னாள் உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா், கோட்ட ரயில்வே பொதுமேலாளா் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினா், பொதுமக்கள், ரயில்வே ஊழியா்கள் கலந்துகொள்ள இருக்கின்றனா். இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:

நாமக்கல் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது. பிரதமா் காணொலிக் காட்சி வாயிலாக திறக்கும் நேரம் குறித்த தகவல் இன்னும் வரவில்லை. அம்ருத் திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளுடன் சுமாா் ரூ. 36 கோடியில் நவீனமயமாகியுள்ள நாமக்கல் ரயில் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரயில்கள் எண்ணிக்கை தற்போதைய நிலையில் குறைவாக இருப்பினும், வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு, தனியாா் பேருந்து சேவை, உணவக சேவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments