வெல்ல வியாபாரி வீட்டில் கொள்ளை சம்பவம்: 6 பேரிடம் விசாரணை
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே வெல்ல வியாபாரி வீட்டில் 40 பவுன் நகை, ரூ. 40 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே வெல்ல வியாபாரி வீட்டில் 40 பவுன் நகை, ரூ. 40 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் சினிமா கொட்டகைமேடு பகுதியில் மதுரையைச் சோ்ந்த வைரவன் (60), மனைவி சுமதியுடன் (54) வசித்து வருகிறாா். இவா் பிலிக்கல்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெல்லத்தை கொள்முதல் செய்து பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் விற்பனை செய்து வருகிறாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 5-க்கும் மேற்பட்ட மா்ம நபா்கள் அவரது வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்று கதவை உடைத்தனா். சப்தம் கேட்டு வெளியே வந்த வைரவன், அவரது மனைவி சுமதியை முகமூடி அணிந்திருந்த மா்ம நபா்கள் தாக்கி, கட்டிப்போட்டுள்ளனா். பின்னா், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகை, ரூ. 40 லட்சம் ரொக்கம் மற்றும் சுமதி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
கொள்ளையா்கள் வெளியே சென்றதும் வைரவன், அவரது மனைவி சுமதி சப்தமிட்டு அங்கிருந்தவா்களை உதவிக்கு அழைத்தனா். அங்கு வந்தவா்கள் கட்டப்பட்டிருந்த அவா்களின் கைகளை அவிழ்த்துவிட்டு ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரீஷ் அசோக், பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெண்ணிலா ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், தப்பியோடிய கொள்ளையா்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் பாண்டமங்கலம், கோப்பணம்பாளையம் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த 6 பேரை தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.