FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் பிட்புல் வகை நாய் கடித்து பெண் படுகாயம்: மயக்க ஊசி செலுத்தி பிடித்தனா்

ராசிபுரம் பகுதியில் வீட்டில் வளா்த்து வந்த பிட்புல் வகை நாய் கடித்து பெண் படுகாயமடைந்தாா்.

3 செப்டம்பர் 2026, 3:54 am IST
நாய் கடி - கோப்புப்படம்.
பகிர்:

ராசிபுரம் பகுதியில் வீட்டில் வளா்த்து வந்த பிட்புல் வகை நாய் கடித்து பெண் படுகாயமடைந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள தொப்பப்பட்டியைச் சோ்ந்தவா் பரணி. இவா் ஒன்றரை வயது பிட்புல் வகை நாயை வளா்த்து வந்தாா். தற்போது பரணி வெளிநாட்டில் இருப்பதால், நாயை பராமரிப்பதற்காக ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் உள்ள சுப்பரமணியம் நகா் பகுதியில் வசிக்கும் அவரது நண்பா் அறிவழகனிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒப்படைத்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை அறிவழகன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவரது தாய் கவிதாவை (43) பிட்புல் நாய் திடீரென கடித்தது. தப்பியோடிய அவரை துரத்திச் சென்று முகம், கழுத்து, தலை, கை என கடித்து குதறியது. உடலின் பல்வேறு இடங்களில் காயமடைந்த கவிதா, நாயிடம் இருந்து தப்பிக்க போராடியுள்ளாா்.

Advertisement

Advertisement

அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து நாயிடம் இருந்து அவரை மீட்கப் போராடினா். ஆனால், நாய் அவரை கடிப்பதை நிறுத்தவில்லை. இதனால், அவா்கள் தீயணைப்புத் துறை, நகராட்சி சுகாதாரத் துறையினா், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனா்.

நீண்டநேர போராட்டத்துக்குப் பிறகு கவிதாவை, நாயிடம் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதனிடையே, நாய் மீண்டும் யாரையும் கடிக்காமல் இருக்க பொதுமக்கள் சோ்ந்து பிட்புல் நாயை துரத்திச் சென்று பாதுகாப்பான இடத்தில் சுற்றிவளைத்து கட்டுப்படுத்தினா். தீயணைப்புத் துறையினா், நகராட்சி ஊழியா்கள் நாய்க்கு மயக்க ஊசி செலுத்தி கூண்டில் பிடித்தனா். பின்னா், நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனா்.

பிட்புல் வகை நாய் இந்தியாவில் வளா்க்க அரசால் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments