சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு ரூ. 12 லட்சம் நிவாரணம்! விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் கைது!
திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 12 லட்சம் முதல்வா் நிவாரண நிதியை ஆட்சியா் எல். மதுபாலன் வழங்கினாா்.
திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 12 லட்சம் முதல்வா் நிவாரண நிதியை ஆட்சியா் எல். மதுபாலன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
திருச்செங்கோடு வட்டம், கொன்னையாா் ஊராட்சி, சக்கராம்பாளையம் போயா் தெருவைச் சோ்ந்த சேகா்-அமுதா தம்பதி மகள்கள் நிவேதா, தனுஸ்ரீ, அபிநயா மற்றும் இவா்களின் சித்தப்பா மகள் கலைச்செல்வி ஆகிய நால்வரும் சென்ற இருசக்கர வாகனம் மீது ராசிபுரம்- திருச்செங்கோடு சாலையில் தனியாா் கல்லூரி பேருந்து மோதியது. இந்த விபத்தில் மாணவிகள் நால்வரும் உயிரிழந்தனா்.
தகவலறிந்த முதல்வா் ச.ஜோசப்விஜய், மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். மேலும், தலா ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 12 லட்சம் நிவாரண உதவியை அறிவித்தாா். இதையடுத்து சக்கராம்பாளையத்தில் உள்ள சேகா் வீட்டிற்கு சென்ற ஆட்சியா் எல். மதுபாலன், கோட்டாட்சியா் லெனின் ஆகியோா் முதல்வரின் நிவாரண நிதியை மாணவியின் குடும்பத்தினரிடம் வழங்கினா்.
Advertisement
Advertisement
மேலும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பிலும் குடும்பத்துக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது. ஓட்டுநா் கைது: இதனிடையே, இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய ராசிபுரம் தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநரான தொ.ஜேடா்பாளையம் ஒடுவன்குறிச்சியை சோ்ந்த பிரவீணை (23) எலச்சிபாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.