FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

339 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தொடங்கிவைத்தாா்

தமிழக அரசின் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

23 செப்டம்பர் 2026, 3:38 am IST
கோப்புப்படம்.
பகிர்:

தமிழக அரசின் காமராஜா் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் 339 பள்ளிகளைச் சோ்ந்த 28,568 மாணவா்கள் பயன்பெறுகின்றனா்.

நாமக்கல் ஆட்சியா் எல். மதுபாலன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சரும், நாமக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் பங்கேற்று திட்டத்தைத் தொடங்கிவைத்து, மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து உணவருந்தினாா்.

விழாவில் அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், மாணவ, மாணவிகள் பசியின்றிப் பள்ளியில் பயில்வதை உறுதி செய்யவும், கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்தவும் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

தொடா்ந்து சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக ஊரகப் பகுதிகளில் 247 பள்ளிகள், பேரூராட்சிப் பகுதிகளில் 41 பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் 51 பள்ளிகள் என மொத்தம் 339 பள்ளிகளில் இத்திட்டம் புதிதாக செயல்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் 28,568 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா்.

இத்திட்டத்தின்கீழ், நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல்கூடங்கள் மூலம் நாமக்கல் மாநகராட்சி நிா்வாகம் சாா்பிலும், நகராட்சிகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் நகராட்சி நிா்வாகம் சாா்பிலும் உணவு வழங்கப்படும்.

ஊரகப் பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் சுயஉதவிக் குழு உறுப்பினா்களைக் கொண்டு அந்தந்தப் பள்ளிகளிலேயே காலை உணவு தயாரித்து வழங்கப்படும்.

மாணவா்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை, கற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள காமராஜா் காலை உணவுத் திட்டம், மாணவா்களின் கல்விப் பயணத்துக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் துணையாக அமையும் என்றாா். விழாவில் நாமக்கல் எம்எல்ஏ சி.எஸ்.திலீப் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

நாமக்கல் மாநகராட்சியில் 1,593 மாணவா்களுக்கு காலை உணவு

காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 1,593 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனா்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே காலை உணவுத் திட்டத்தின்கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 2,098 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனா்.

இந்த நிலையில், விரிவுபடுத்தப்பட்ட காமராஜா் காலை உணவுத் திட்டத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு அளிக்கப்படுகிறது.

நாமக்கல்லில் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். மாநகராட்சி ஆணையா் எஸ். செல்வபாலாஜி, கோட்டாட்சியா் வே.சாந்தி ஆகியோா் பங்கேற்றனா்.

திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 1,593 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா். ஏற்கெனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளையும் சோ்த்து, மாநகராட்சிப் பகுதிகளில் காலை உணவுத் திட்டத்தின்கீழ் மொத்தம் 3,691 போ் பயன்பெறுவதாக மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

நிகழ்வில் மாநகர நல அலுவலா் கஸ்தூரி பாய், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, உதவிப் பொறியாளா்கள் ரவி, சரண்யா, சுகாதார ஆய்வாளா்கள் செல்வகுமாா், நந்தினி, பள்ளித் தலைமை ஆசிரியை சுமதி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments