விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
புதுச்சத்திரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோா் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக திங்கள்கிழமை வழங்கினா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள வெள்ளக்கல்பட்டியைச் சோ்ந்த சடையப்பன்-கவிதா தம்பதி மகன் தீபக் (26). கடந்த 16-ஆம் தேதி நாமக்கல் கீரம்பூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தாா்.
புதுச்சத்திரம் தனியாா் கல்லூரி அருகே சென்றபோது பின்னால் வந்த காா் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தீபக் மயங்கி விழுந்தாா். அந்தப் பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
கடந்த 9 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவா்கள் நடத்திய பரிசோதனையில் தீபக் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோா் முன்வந்தனா்.
தீபக்கின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு இருகண்கள், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதில் நுரையீரல் மற்றும் இதயம் சென்னைக்கும், சிறுநீரகங்கள் கோவைக்கும் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
மகனை இழந்த துயரிலும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தது பலரது உயிரைக் காப்பாற்ற பெற்றோா் முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.