தேவூர் அருகே மோட்டூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தொடக்கம்
அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளதையொட்டி தேவூர் அருகே மோட்டூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளதையொட்டி தேவூர் அருகே மோட்டூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு சங்ககிரி வட்டம், தேவூர், அரசிராமணி செட்டிப்பட்டி அருகே உள்ள மோட்டூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மோட்டூரில் சிற்பி சின்னசக்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரசாயனப் பொருள்கள் கலக்காமல் எளிதில் கரையக்கூடிய வகையில் மரவள்ளிக்கிழங்கு மாவு, களிமண், காகிதம், சவுக்குக் கட்டைகளைப் பயன்படுத்தி அரை அடி முதல் 17 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகின்றனர். இச்சிலைகள் ரூ.50 முதல் ரூ.27 ஆயிரம் வரையிலான விலைகளில் விற்பனைக்கு வைக்க உள்ளனர். நிகழாண்டு தலைப்பாகை கணபதி, ஒரு வாகன கணபதி, சிங்க வாகனம், தர்பார் விநாயகர், பாண்டுரங்கன், மயில், அன்னம், பாம்பே தாமரை, நந்தி, லிங்கம், , பாகுபலி, கஜேந்திரா, நிலா, ஆதிசேஷன், கிருஷ்ணர், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு வளம் பெற வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் விஷ்ணுவின் கையில் உள்ள ஸ்ரீசக்கரம் விநாயகர் சிலைக்கு பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் வகையிலான விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தருமபுரி, சேலம், நாமக்கல், சங்ககிரி, எடப்பாடி, மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஆட்டையாம்பட்டி, தேவூர், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம் சித்தார், அம்மாப்பேட்டை, குருவரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.