காங்கிரஸ் முதல்வர்களுக்கு குறி! மெட்டா கண்ணாடி வைத்து ‘ஸ்டிங்’ ஆபரேஷன்... டி.கே. சிவகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!
மெட்டா கண்ணாடி மூலம் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளதைப் பற்றி...
காங்கிரஸ் முதல்வர்களான தன் மீதும், கேரள முதல்வர் வி.டி. சதீசன் மீதும் மெட்டா கண்ணாடி வைத்து ‘ஸ்டிங் ஆபரேஷன்’ (ரகசிய நடவடிக்கை) நடத்தியதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கன்னட தொலைக்காட்சிக்கு டிகே சிவகுமார் அளித்த பேட்டியில் அவரின் குற்றச்சாட்டுகள், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் ரகசிய நடவடிக்கைகள் குறித்த விவகாரத்துக்கு மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய நடவடிக்கைகளை விடியோ, ஆடியோ பதிவு செய்து வெளியிடுவதற்கு ‘ஸ்டிங்’ ஆபரேஷன் அல்லது ரகசிய நடவடிக்கை என்று அழைக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் தொடர்பான விடியோக்கள் சமீபத்தில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் முதல் வாரத்தில் நடந்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், “தனியார் முகமைகள் அமைச்சர்களை குறி வைத்து ஸ்டிங் ஆபரேஷன்களை நடத்தி வருகின்றன. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிலளித்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி, “இதுபோன்ற ஸ்டிங் ஆபரேஷன்களுக்குப் பின்னால் இருப்பது டிகே. சிவகுமார்தான். அவர்தான் சித்தராமையா, அமைச்சர்களை பதவி விலக வைத்தார்” என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கும் நிலையில், “காங்கிரஸ் முதல்வர்களான தன் மீதும், கேரள முதல்வர் வி.டி. சதீசன் மீதும் மெட்டா கண்ணாடி வைத்து ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியதாக” சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் செய்திச் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசும்போது, “என்னைச் சந்திக்க தொழிலதிபர் ஒருவர் வந்திருந்தார். அவர் மெட்டா கண்ணாடி அணிந்திருந்தார். மேலும், இங்கு வந்து போகிறவர்கள் மற்றும் நான் சந்திக்கும் அரசியல் தலைவர்கள் குறித்தும் அவர் வினவினார்” என்றார்.
இந்த விவகாரம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனால், அதன் விவரங்களை நாங்கள் வெளியிடவில்லை” என்றார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரகசிய நடவடிக்கை விடியோக்கள் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில், இதன் பின்னணியில் யார் இருந்தார்கள், இதன் அரசியல் நோக்கம் என்ன என்பது குறித்து காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் ஒருவரையொருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
டிகே சிவகுமாருக்கு அளித்த தகவலின்படி, வந்திருந்த தொழிலதிபர், “முதலில் தொழில் வர்த்தகம் குறித்து பேசியதாகவும் அதன்பின்னர் வாக்குச்சாவடிகள், அரசியல் வியூகங்கள் குறித்து பேச்சை மாற்றியதாகவும்” தெரிவித்துள்ளார். இதனால், அவர் மீது சந்தேகம் அடைந்து அதிகாரிகளை வைத்து விசாரிக்க கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்தத் தொழிலதிபர் கேரள முதல்வர் வி.டி. சதீசனைச் சந்தித்தபோது அதே மெட்டா கண்ணாடிகளை அணிந்திருந்ததும், ஆனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், பெயர் குறிப்பிடாத ஒரு மத்திய அமைச்சரைச் சந்தித்தபோதும் அவர் அந்த கண்ணாடியை அணியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஸ்டிங் ஆபரேஷன் விவகாரத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தனக்குத் தெரியும், அந்தத் தொழிலதிபரின் விவரங்கள் தயாராக இருப்பதாகவும் தேவைப்படும் நேரத்தில் வெளியிடுவேன் என்றும் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
Karnataka Chief Minister DK Shivakumar made an explosive claim amid the ongoing sting operation row involving former CM Siddaramaiah. DKS alleged that an industrialist wearing Meta smart glasses attempted to secretly record him and Kerala Congress CM VD Satheesan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.