சேலத்தில் 104 கோபுரங்கள் 4ஜியாக தரம் உயர்த்தப்படுகிறது: முதன்மை பொது மேலாளர்
சேலம் நகரில் 104 கோபுரங்கள் 4ஜி யாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது என பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு மாவட்டத்தின் முதன்மை பொது மேலாளர் எஸ்.சபீஷ் தெரிவித்தார்.
சேலம் நகரில் 104 கோபுரங்கள் 4ஜி யாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது என பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு மாவட்டத்தின் முதன்மை பொது மேலாளர் எஸ்.சபீஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
சேலம் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு வட்டத்தில் 41 புதிய 3ஜி கோபுரங்களும், 111 கோபுரங்களும் புதிய தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் 2ஜி கோபுரங்கள் 81 புதிய தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
183 புதிய 3ஜி கோபுரங்கள், 3ஜி 188 கோபுரங்கள் புதிய சீமன்ஸ் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் 2ஜி கோபுரங்கள் 108 புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துக்கு மாற்றம் நடைபெறுகிறது. இந்த மாற்றத்தின் மூலம் டேட்டா வேகம் மற்றும் கவரேஜ் மேம்படும்.
3ஜி கோபுரங்கள் 104 , 4ஜி
கோபுரங்களாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அலைக்கற்றை உரிமம் கிடைத்தவுடன் 4ஜி சேவை சேலம் நகரில் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும். சேலத்தில் உள்ளஅனைத்து தொலைபேசி நிலையங்களும், அடுத்த தலைமுறை நெட்வொர்க்காக மாற்றம் செய்யப்படுகிறது.
சாதாரண தொலைபேசி சேவை, செல்லிடப்பேசி மற்றும் பிராண்ட் பேண்ட் சேவைகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை சேலம் வட்டம் செயல்படுத்தி வருகிறது. 5ஜி சேவை வரும் 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
சிடிஎம்ஏ சேவை நிறுத்தம்...
மேலும், சேலம் வட்டத்தில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் சி.டி.எம்.ஏ. சேவை நிறுத்தப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் ஜி.எஸ்.எம். சேவைக்கோ அல்லது சாதாரண தொலைபேசி சேவைக்கோ மாறிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஃப்.டி.டி.எச். எனப்படும் கண்ணாடி இழை சேவை மூலம் எந்தவொரு நிறுவன வாடிக்கையாளர்களிடம் மாதாந்திர வாடகையில் பேசிக் கொள்ளும் வசதி உள்ளது. சாதாரண தொலைபேசி சேவை ரூ.99 கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய சர்வதேச வைஃபை இணைப்பு மூலம் 30 நாள்களுக்கு ரூ.501 கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் சேவை பெறலாம். இதன்மூலம் சர்வதேச நாடுகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேசுவதற்கு நல்ல திட்டமாக இது உள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 21 வைஃபை ஹாட் ஸ்பாட்ஸ் சேவை உள்ளது. இதில் 51 ஹாட் ஸ்பாட்ஸ் மையங்கள் புதியதாக ஏற்படுத்தப்பட உள்ளன.
சேலம் தொலைத்தொடர்பு வட்டத்தில் சேலம் பழைய பேருந்து நிலையம், மெய்யனூர், செவ்வாய்ப்பேட்டை, ஆத்தூர், ராசிபுரம் உள்ளிட்ட 5 தொலைபேசி நிலையங்களில் 195 கிலோ வாட் திறன் கொண்ட சூரியஒளி மின்சார அமைப்பு நிறுவும் பணி நடந்து வருகிறது.
ஏர்செல் நிறுவனம் சேவையை நிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்து புதிதாக 1.10 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியுள்ளனர். தமிழகம் முழுவதும் 15 லட்சம் பேர் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியுள்ளனர்.
சேலம் வட்டத்தில் 67,000 சாதாரண தொலைபேசி இணைப்புகளும், 23,000 பிராண்ட் பேண்ட் சேவை இணைப்புகளும், 3,000 சி.டி.எம்.ஏ. வாடிக்கையாளர்களும், 7.6 லட்சம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களும், 25,000 போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
அதேவேளையில் ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்கள் அதிகமாக உள்ளதால் சாதாரண தொலைபேசி வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இணைப்பை திரும்பப் பெற்று வருகின்றனர். பிராண்ட் பேண்ட் இணைப்புகளும் திரும்பப் பெறப்படுகிறது. கேரளத்தில் மழை வெள்ளத்தால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.380 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு சீரமைப்புப் பணிகளும், தொலைபேசி சேவை வழங்குவதில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது என்றார்.
பேட்டியின் போது துணைப் பொது மேலாளர்கள் முத்துசாமி (நிதி), பொன்னுசாமி (நிர்வாகம்), அண்ணாதுரை (திட்டம்), எம்.ஆர்.தியாகராஜன் (செல்லிடப்பேசி) ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.