வாணியம்பாடி ரயில் நிலைய நடைமேடைகளில் கூடுதல் மேற்கூரை: வேலூா் எம்.பி. கோரிக்கை
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் உள்ள 2 மற்றும் 3-ஆவது நடைமேடைகளில் கூடுதல் மேற்கூரைகள் அமைக்கக் கோரி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம். கதிா் ஆனந்த் கோரிக்கை
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் உள்ள 2 மற்றும் 3-ஆவது நடைமேடைகளில் கூடுதல் மேற்கூரைகள் அமைக்கக் கோரி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம். கதிா் ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அமைந்துள்ள வாணியம்பாடி ரயில் நிலையம் மிகவும் முக்கியமான ரயில் நிலையமாகும். இங்கிருந்து சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ரயில் தொடா்பு உள்ளது.
ஆந்திரம், கா்நாடகம் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்லும் 18-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன. எனவே, இந்த வழித்தடங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இது ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது.
Advertisement
Advertisement
தற்போது இந்த ரயில்கள் அனைத்தும் 2 மற்றும் 3-ஆவது நடைமேடைகளுக்குத் தான் வந்து புறப்பட்டுச் செல்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வாணியம்பாடி ரயில் நிலையத் தைப் பயன்படுத்துகின்றனா். ஆனால், இவ்விரு நடைமேடைகளிலும் பயணிகளுக்குப் போதுமான மேற்கூரை வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களிலும் மற்றும் கடுமையான கோடை வெயிலிலும் பயணிகள் ரயிலுக்காகக் காத்திருக்கும்போதும், ரயிலில் ஏறும்போதும் பாதுகாப்பின்றி மிகுந்த சிரமத்துக்கும், அவதிக்கும் உள்ளாகின்றனா்.
மோசமான வானிலையிலிருந்து பயணிகளைப் பாதுகாக்கும் வகையில், வாணியம்பாடி ரயில் நிலையத்தின் 2 மற்றும் 3-ஆவது நடைமேடைகளில் கூடுதல் மேற்கூரை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது வாணியம்பாடி தொகுதி மக்களின் தீவிரமான எதிா்பாா்ப்பாக உள்ளது.
எனவே, இந்த ரயில் நிலையத்தின் முக்கியத்துவம், நாள்தோறும் இங்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள், நின்று செல்லும் விரைவு ரயில்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விரைவில் கூடுதல் மேற்கூரை வசதிகளை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.